மேலும் செய்திகள்
அரசு பஸ்சில் பற்றிய தீ; அலறி ஓடிய- பயணிகள்
22-Dec-2025
பெங்களூரு அனந்தராவ் சதுக்கம் பகுதியில் இருந்து, 'சீபேர்டு' டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்னி பஸ், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, உத்தர கன்னடாவின் கோகர்ணாவுக்கு, 28 பயணியருடன் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ரபீக், 45 ஓட்டினார். கிளீனராக முகமது சாதிக், 22 என்பவர் இருந்தார். கோரகுண்டேபாளையாவில் மேலும் இருவர் பஸ்சில் ஏறினர். பெங்களூரு - புனே தேசிய நெடுஞ்சாலை 48ல், சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகா கோர்லத்து கிராஸ் ஜவன்கொண்டனஹள்ளி பகுதியில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் ஹரியானா மாநில பதிவெண் உடைய கன்டெய்னர் லாரி, மஹாராஷ்டிரா மாநிலம் சுபாவில் இருந்து பெங்களூரு ரூரல் நெலமங்களாவுக்கு குளிர்பான பெட்டிகளுடன் வந்தது. அவசர கதவு அப்படி வந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தறிகெட்டு ஓடியது. ஒரு கட்டத்தில் சாலை தடுப்பு சுவரை இடித்து தள்ளி, எதிர்திசைக்கு வந்து, சீபேர்டு நிறுவன ஆம்னி பஸ்சின் டீசல் டேங்கர் பகுதியில் மோதியது. மோதிய வேகத்தில், பஸ் தீப்பிடித்தது. லாரியின் முன்பக்கமும், தீ பரவி எரிய ஆரம்பித்தது. பஸ்சுக்குள் அயர்ந்து துாங்கி கொண்டு இருந்த பயணியருக்கு, என்ன நடந்தது என்றே முதலில் தெரியவில்லை. பஸ் டிரைவர் ரபீக், கிளீனர் முகமது சாதிக் பஸ்சில் தீப்பிடித்து விட்டது என்று கூச்சல் போட்டதால், பயணியர் அலறி அடித்து கொண்டு எழுந்தனர். டிரைவர் பக்கம் இருந்த கதவு வழியாகவும், அவசர கதவை திறந்தும் சிலர் வெளியே குதித்தனர். டிரைவரும், கிளீனரும் வெளியே குதித்து தப்பினர். குண்டு வெடித்தது ... பஸ் மீது லாரி மோதிய போது, ஏதோ குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டதால், கோர்லத்து கிராசில் வசித்து வரும் மக்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது, பஸ்சும், லாரியும் தீப்பிடித்து எரிவதை கண்டனர். விரைந்து சென்று பஸ்சுக்குள் இருந்தவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ,சித்ரதுர்கா, துமகூரு சிராவில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களும் அங்கு வந்தன. பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்தன. கிழக்கு மண்டல ஐ.ஜி., ரவிகாந்தே கவுடா, சித்ரதுர்கா எஸ்.பி., ரஞ்சித் குமார் பண்டாரு ஆகியோரும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். தீயில் கருகி, 19 பேர் இறந்ததாக நேற்று காலையில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இதை மறுத்த ஐ.ஜி., ரவிகாந்தே கவுடா ஒன்பது பேர் இறந்ததாக கூறினார். ஆனால், போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி ஐந்து பேர் மட்டுமே இறந்ததாக கூறியதால், எது உண்மை என்பதில் குழப்பம் ஏற்பட்டது. டி.என்.ஏ., சோதனை இதற்கிடையில், பஸ்சில் தீக்காயத்துடன் போராடிய 27 பேர் சிகிச்சைக்காக, சித்ரதுர்கா, சிரா, ஹிரியூர், பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், சித்ரதுர்கா எஸ்.பி., ரஞ்சித்குமார் பண்டாரு நேற்று மாலை அளித்த பேட்டி: கோர்லத்து கிராஸ் பகுதியில் ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி, இரு வாகனங்களும் தீப்பிடித்த எரிந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த பெண் குழந்தை கிரேயா, 6, அவரது தாய் பிந்து, 28, மற்றும் மானசா, 26, நவ்யா, 26, ராஷ்மி, 27 ஆகியோரும், லாரி டிரைவரான உத்தர பிரதேச மாநிலத்தின் குல்தீப்பும் உடல் கருகி இறந்து உள்ளனர். மானசா, நவ்யாவின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் தோழிகள் என்பதால், தங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை அடிக்கடி மாற்றி கொள்வது வழக்கம். டி.என்.ஏ., சோதனை செய்த பின், இருவரின் உடல்களும் அடையாளம் காணப்படும். முதற்கட்ட விசாரணையில் லாரி டிரைவரிவன் அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும் விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆம்னி பஸ் டிரைவர் ரபீக் கூறுகையில், ''எதிர்திசையில் வந்த கன்டெய்னர் லாரி வேகமாகவும், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகவும் வருவதை கண்டேன். அந்த நேரத்தில் பஸ், 70 கி.மீ., வேகத்தில் சென்றது. லாரி மோதி விடக்கூடாது என்பதால், முடிந்த அளவுக்கு பஸ்சை முன்னோக்கி கொண்டு செல்ல முயன்றேன்,'' என்றார். விபத்தில் சிக்கிய பஸ், இரவு 11:30 மணிக்கு நெலமங்களா சுங்கச்சாவடியை கடந்து சென்ற காட்சிகளின், வீடியோவும் வெளியாகி உள்ளது. விபத்தில் சிக்கியது ஏசி இல்லாத படுக்கை வசதி கொண்ட பஸ். ஒருவேளை இது ஏசி பஸ்சாக இருந்திருந்தால் இன்னும் பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்து இருக்கும். ஜன்னல் வழியாக பலர் வெளியே குதித்து உள்ளனர். எரிந்து உடைமைகள் பஸ் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால், பயணியரின் உடைமைகள் அனைத்து தீயில் எரிந்து கருகின. மொபைல் போன், பர்ஸ் சாலையில் எரிந்து கிடந்ததை பார்க்க முடிந்தது. தடய அறிவியல் நிபுணர்களும் விபத்து நடந்த இடத்தில் சிதறி கிடந்த, பல பொருட்கள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரதமர் இரங்கல் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு தலா இரண்டு லட்சம் ரூபாயும், கர்நாடக அரசு தலா, 5 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்து உள்ளன.
விபத்தில் உயிர் தப்பிய ஐ.டி., ஊழியர் ஹேமராஜ் கூறுகையில், ''நான், மனைவி, மகன் மூன்று பேரும் பெங்களூரில் இருந்து கோகர்ணா சென்றோம். டிரைவர் இருக்கைக்கு பின்பக்கம் உள்ள படுக்கையில் நான், மனைவி, மகன் துாங்கிக் கொண்டு இருந்தோம். பஸ், லாரி மீது மோதியதும், என் தலையில் ஏதோ இடித்தது போன்று உணர்ந்தேன். கண் விழித்து பார்த்த போது புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அசம்பாவிதம் நடந்தது தெரிந்ததும், மனைவி, மகனுடன் உடைந்திருந்த ஜன்னல் கண்ணாடி வெளியாக வெளியே குதித்தேன். ஆம்புலன்ஸ் வந்ததும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போது நலமாக உள்ளோம்,'' என்றார்.
விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சில் பயணித்த பெரும்பாலானோர், பெங்களூரை சேர்ந்தவர்கள். கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி, உத்தர கன்னடாவின் கோகர்ணாவுக்கு சுற்றுலா சென்று உள்ளனர். காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோருக்கு சிறிய அளவில் தீக்காயமே ஏற்பட்டு உள்ளது. பெங்களூரின் மஞ்சுநாத், 24, என்பவருக்கு, 30 சதவீத தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. இவரும், தேவிகா, 22, கீர்த்தன், 22, ஆகியோரும் சித்ரதுர்கா மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
தீயில் கருகி இறந்த நவ்யா, ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா அங்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர். மானசா, சென்னராயப்பட்டணா டவுனை சேர்ந்தவர். இருவரும் ஹாசனில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் ஒன்றாக படித்து, ஒரே இடத்தில் வேலை செய்த நெருங்கிய தோழிகள். இன்னொரு தோழி மிலானாவுடன் கோகர்ணாவுக்கு சென்ற போது, விபத்தில் மானசாவும், நவ்யாவும் இறந்து உள்ளனர். மிலானா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். மானசாவுக்கு திருமணம் நிச்சயமாகி, அடுத்த ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடக்க இருந்தது. நவ்யாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
22-Dec-2025