உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் கடந்த 4 மாதங்களில் 65 கொலைகள்! 2023ஐ விட குறைவு என போலீசார் சமாளிப்பு

பெங்களூரில் கடந்த 4 மாதங்களில் 65 கொலைகள்! 2023ஐ விட குறைவு என போலீசார் சமாளிப்பு

பெங்களூரில் குற்ற சம்பவங்கள், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றன. சிறு காரணங்களுக்காக கூட, கொலைகள் நடக்கின்றன. போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்தும், பலன் கிடைக்கவில்லை.தினமும் ஏதாவது ஒரு இடத்தில், இரவில் மட்டுமின்றி, பட்டப்பகலிலும் கொலை நடக்கிறது. சமீபத்தில் முன்னாள் டி.ஜி.பி., ஓம் பிரகாஷ், தன் மனைவியால் கொலை செய்யப்பட்டார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் துறையின் புள்ளி - விபரங்களின்படி, நடப்பாண்டு நான்கே மாதங்களில், 65 கொலைகள் நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரு பொது மக்களுக்கு பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'இத்தகைய சம்பவங்களால், நகருக்கு அவப்பெயர் ஏற்படுகிறது' என, சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 2023 ஆண்டுடன் ஒப்பிட்டால், 2024ல் பெங்களூரில் கொலைகளின் எண்ணிக்கை, 16 சதவீதம் குறைந்திருப்பது, ஆறுதலான விஷயமாகும். ஆனால் நடப்பாண்டு நான்கு மாதங்களில், 65 கொலைகள் நடந்துள்ளன என்பது, கவலைக்குரிய விஷயமாகும். நிலத்தகராறு, பணப்பிரச்னை, காதல், திடீர் வாக்குவாதம், முன் விரோதம் உட்பட பல்வேறு காரணங்களால், கொலைகள் நடந்தன. சிறு வாக்குவாதம் கூட, சில நேரங்களில் கொலையில் முடிகிறது. இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்துவது கஷ்டம். முன்விரோதம் காரணமாக, சதித்திட்டம் தீட்டி, கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. பெண்களுடன் நெருக்கமாக பழகியது மற்றும் கள்ளக்காதல் தகராறுகளிலும் கொலைகள் நடந்துள்ளன. இளம்பெண்கள், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. குற்ற வழக்குகளில் தொடர்பு கொண்டவர்களை, போலீசார் கண்டுபிடித்து கைது செய்கின்றனர். ஆனால் இவர்கள் ஜாமினில் வெளியே வந்து, மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை உட்பட மற்ற குற்றங்களை கட்டுப்படுத்த, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர்.கூடுதல் போலீசார் நியமித்தது, ஹொய்சாளா ரோந்து வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரித்தது, முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது, பழைய வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வது, ரவுடிகள் கண்காணிப்பு, அவ்வப்போது அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என, பல வழிகளை கையாள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை