உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு மாநகராட்சியில் முறைகேடு முதல்வரிடம் 8,900 பக்க அறிக்கை சமர்ப்பிப்பு

பெங்களூரு மாநகராட்சியில் முறைகேடு முதல்வரிடம் 8,900 பக்க அறிக்கை சமர்ப்பிப்பு

பெங்களூரு:கர்நாடகாவில் 2019 - 20 மற்றும் 2022 - 23ல் பெங்களூரு மாநகராட்சி மேற்கொண்ட பணிகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை, முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை ஆணையம் நேற்று சமர்ப்பித்தது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு 2023ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது, 2019 - 20, 2022 - 23 காலகட்டத்தில் பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் பணிகளை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் முதல்வரிடம், துணை முதல்வர் சிவகுமார் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, 2023 ஆக., 5ம் தேதி நிபுணர்கள் அடங்கிய நான்கு சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டன. பின், 2023 டிச., 15ல், இக்குழுக்கள் திரும்ப பெறப்பட்டன. ஓய்வு பெற்ற நீதிபதி நாக்மோகன் தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மாநில அரசு, 2024 ஏப்., 20ல் வெளியிட்ட அறிக்கையின்படி, மாநகராட்சி செய்ததாக கூறப்பட்ட 761 பணிகளை ஆணையம் ஆய்வு செய்தது. இதில் பல முறைகேடுகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணை ஆணையம் நேற்று முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் முதல்வர் சித்தராமையாவிடம், 8,900 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. 'பணிகள் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி