மொபைல் போனுக்கு கர்நாடகாவின் சிறார்கள் 99% பேர் அடிமைகள்!: கே.சி.ஆர்.பி., ஆணையம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி
பெங்களூரு: அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு, சிறார்களிடம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் 99 சதவீதம் சிறார்கள், மொபைல் போனுக்கு அடிமையாக இருக்கும் அதிர்ச்சி தகவல், கர்நாடக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.தற்போது டிஜிட்டல் யுகமாக மாறியுள்ளது. ஆன்லைன், மொபைல் போன் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. சகலமும் ஆன்லைன் வழியாக நடக்கிறது. பெரியவர்கள் மட்டுமின்றி, சிறார்களின் உலகமும் மொபைல் போனில் அடங்கிவிட்டது.நாட்டில் கொரோனா தொற்று பரவிய போது, மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்தது. பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதால், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் தங்களின் பிள்ளைகளுக்கு, பெற்றோர் புதிதாக மொபைல் போன் வாங்கிக் கொடுத்தனர்.இரண்டு மணி நேரம் வகுப்புகளுக்கு ஆஜரான பின், வீடியோ கேம்ஸ் விளையாடி வந்தனர். அதிக நேரம் மொபைல் போனில் செலவிட்டனர்.கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து, பள்ளி, கல்லுாரிகள் செயல்பட துவங்கிய பின்னரும், சிறார்கள் மொபைல் போன் பழக்கத்தை கைவிடவில்லை. இது அவர்கள் மன நலன், உடல் நலனில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்தனர்.எனவே சைல்டு பண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பில், கர்நாடக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு நடத்தியது. தற்போது ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பெங்களூரின் விகாஸ்சவுதாவில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில், மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அறிக்கையை வெளியிட்டார். இதில் இடம்பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.கர்நாடகாவில் 99 சதவீதம் சிறார்கள் மொபைல் போனுக்கு அடிமையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:பெங்களூரு, சிக்கமகளூரு, பெலகாவி, சாம்ராஜ்நகர், ராய்ச்சூர் மாவட்டங்களில் எட்டு முதல் 18 வயது வரையிலான சிறார்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. எட்டு முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 87 சதவீதம் பேர் மொபைல் போன பயன்படுத்துகின்றனர். 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமியரும் மொபைல் போனுக்கு அடிமையாக உள்ளனர்.ஒட்டுமொத்தமாக 99 சதவீதம் சிறுவர்கள், 100 சதவீதம் சிறுமியர் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவது, ஆய்வில் தெரிந்தது. சமூக வலைதளங்களையும், சிறார்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். பெற்றோரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. பலரும் தங்கள் பிள்ளைகள், ஆன்லைன் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை விவரித்துள்ளனர்.12 வயது முதல் 14 வயது வரையிலான, 97 சதவீதம் சிறார்கள், 'யு டியூப்' பயன்படுத்துகின்றனர். 92 சதவீதம் சிறார்கள் 'வாட்ஸாப்', 73 சதவீதம் சிறார்கள் 'சர்ச் இன்ஜின்' பயன்படுத்துகின்றனர். 15 வயது முதல் 18 வயது வரையிலான 25 சிறார்கள், தினமும் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில், 16 சதவீதம் பேர், தங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் நட்பு ஏற்படுத்தும் நோக்கில், மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். 10 சதவீதம் பேர் ஆன்லைன் மூலம் அறிமுகமானவர்களை, நேரில் சந்தித்துள்ளனர். தங்களின் அந்தரங்க படங்களையும் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சியான தகவலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராமப்புறங்களின் 97 சதவீதம் சிறார்கள், மொபைல் போன், லேப்டாப், நகர்ப்பகுதிகளின் 93 சதவீதம் சிறார்கள் மொபைல், லேப்டாப் பயன்படுத்துகின்றனர்.பாதிப்புகளால் கவலை!ஆன்லைன் மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்துவதால், சிறார்களிடம் ஏற்படும் பாதிப்புகள் கவலை அளிக்கின்றன. இதற்கு தீர்வு காண ஆலோசிக்க வேண்டும். மேல்சபை கூட்டம் நடக்கும்போது, இது குறித்து விவாதிக்க அனுமதி அளிப்பேன். சபையில் உறுப்பினர்களுடன் ஆலோசித்து, ஆன்லைன் மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவதால், சிறார்களுக்கு ஏற்படும் தாக்கத்தை தடுக்கும் நோக்கில், தகுந்த விதிமுறைகள் வகுக்கப்படும்.பசவராஜ் ஹொரட்டி,மேல்சபை தலைவர்.