உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நடிகர் தர்ஷன் போன்று தனக்கும் ஜாமின் கேட்கும் கொலையாளி

நடிகர் தர்ஷன் போன்று தனக்கும் ஜாமின் கேட்கும் கொலையாளி

தார்வாட்,: கல்லுாரி மாணவியை கொலை செய்த வழக்கில் கைதான பயாஸ், நடிகர் தர்ஷனுக்கு ஜாமின் வழங்கியது போன்று தனக்கும் ஜாமின் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் பி.வி.பி., கல்லுாரியில் எம்.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்த நேஹா ஹிரேமத் என்ற மாணவியை, பெலகாவியை சேர்ந்த பயாஸ், 24, என்ற மாணவர் சரிமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கு, முதலாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தனக்கு ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவில், 'சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷனுக்கு ஜாமின் வழங்கியது போன்று, தனக்கும் ஜாமின் வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மனு மீதான உத்தரவை, இன்று (4ம் தேதி) வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய மின்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை, மாணவியின் நேஹாவின் தந்தை நிரஞ்சனய்யா ஹிரேமத் நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார். பின், நிரஞ்சனய்யா அளித்த பேட்டி: இவ்விஷயத்தில் மத்திய அமைச்சர், எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே துணையாக இருந்துள்ளார். வழக்கு விசாரணை விபரங்கள் குறித்து அவருக்கு தெரியாததாலும், பயாசின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வருவது குறித்தும் அவருக்கு தெரிவிக்க வந்தேன். எனது மகளை கொன்ற பயாஸ், தன் ஜாமின் மனுவில், நடிகர் தர்ஷனுக்கு ஜாமின் வழங்கியது போன்று தனக்கும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நடிகர் தர்ஷனின் நடிப்பு, திறமையை பார்த்து அவரை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்டால் பரவாயில்லை. ஆனால், கொலை வழக்கில், அவருக்கு ஜாமின் வழங்கியது போன்று தனக்கும் ஜாமின் வழங்க வேண்டும் என்று கேட்பது சரியல்ல. நீதித்துறையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பயாஸுக்கு ஜாமின் கிடைத்தால், இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை