ஊசி போட்ட இளைஞர் பலி டாக்டர் மீது குற்றச்சாட்டு
குடகு: டாக்டர் இரண்டு ஊசிகள் போட்ட சிறிது நேரத்தில், கை வலி சிகிச்சை பெற வந்த இளைஞர் உயிரிழந்தார். குடகு மாவட்டம், குஷால்நகர் தாலுகாவின், சுன்டிகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் வினோத், 25. இவரது வீட்டை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. கூலியாட்களை அழைக்காமல், தானே பணியில் ஈடுபட்டிருந்தார். வீட்டு வளாகத்தில் இருந்த மரங்களையும் கூட, தானே வெட்டினார். அதிகமான பணிகளை செய்ததால், கை தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. நேற்று முன் தினம் சிகிச்சைக்காக, கிராமத்தில் இருந்த, தனியார் கிளினிக்குக்கு சென்றார். இவரை பரிசோதித்த டாக்டர் யசோதர் பூஜாரி, மாத்திரை கொடுத்து, ஒரு ஊசி போட்டார். அப்போதும் வலி குறையாத காரணத்தால், மற்றொரு ஊசி போட்டு, வீட்டுக்கு அனுப்பினார். வினோத் நடந்து வீட்டுக்கு செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்தார். இதை கண்ட அப்பகுதியினர், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோரும், அப்பகுதியினர் உதவியுடன், மகனை மடிகேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வினோத்தை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். இவருக்கு உடலில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை. அதிகப்படியான வேலை செய்ததால், தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. ஆனால் இந்த வலிக்கு என்ன காரணம் என்பதை, சரியாக பரிசோதிக்காமல், டாக்டர் யசோதர் பூஜாரி, இரண்டு ஊசிகள் போட்டுள்ளார். இதுவே வினோத்தின் இறப்புக்கு காரணம் என, பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். டாக்டர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்தன. இவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, குஷால்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், வினோத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அறிக்கை வந்த பின்னரே, இறப்புக்கு என்ன காரணம் என்பது தெளிவாகும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.