நடிகர் தர்ஷன் சிறை மாற்றம் ஆக., 30ல் ஐகோர்ட் முடிவு?
பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள தர்ஷன் உட்பட ஏழு பேரையும், மாநிலத்தின் வேறு சிறைச்சாலைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, இம்மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட ஏழு பேரின் ஜாமினை, கடந்த 14ம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, ஏழு பேரும் அன்றே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை மாநிலத்தின் மற்ற சிறைச்சாலைக்கு மாற்றும்படி, அரசு தரப்பு சிறப்பு வக்கீல் பிரசன்ன குமார், 57வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை, நேற்று நடைபெற்றது. மனுதாரர்கள் அனைவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபடி காணொளிக்காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த வழக்கில் 14வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிரதோஷ் தரப்பு வக்கீல், 'இம்மனுவுக்கு எதிராக ஆட்சேபனை தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என்றார். பவித்ரா தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், சி.ஆர்.பி.சி.,ன் கீழ் தாக்கல் செய்துள்ளனர். சட்டத்தை மீறி உள்ளதால், என் மனுதாரருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்றார். வக்கீல்களின் வாதங்களை கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அவர்களின் நீதிமன்ற காவலை, செப்., 9ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.