இயக்குநர் நந்த கிஷோர் மீது நடிகர் சபரீஷ் மோசடி புகார்
பெங்களூரு: தன்னிடம் 22 லட்சம் ரூபாய் பெற்று, திருப்பி தராமல், பிரபல கன்னட திரைப்பட இயக்குநர் நந்த கிஷோர் மோசடி செய்ததாக, இளம் நடிகர் சபரீஷ் ஷெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து, சபரீஷ் ஷெட்டி நேற்று அளித்த பேட்டி:திரைப்பட இயக்குநர் நந்த கிஷோர், சில ஆண்டுகளுக்கு முன்பு உடற்பயிற்சி மையத்தில் எனக்கு அறிமுகமானார். எனக்கு பட வாய்ப்பு அளிப்பதாக கூறினார். என்னை செலிப்ரிடி கிரிக்கெட் லீக் அணியில் சேர்த்தார். சில போட்டிகளில் பங்கேற்று விளையாடினேன்.எனக்கு பட வாய்ப்புகள் அளிப்பதாக உறுதி அளித்தார். இதை நம்பிய நான் வீட்டில் இருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து, அவருக்கு 22 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு பட வாய்ப்புகள் அளிக்கவில்லை.பணத்தை திருப்பித் தரும்படி கேட்டபோது, செலிப்ரிடி கிரிக்கெட் அணியில் இருந்து என்னை நீக்குவதாக, நந்த கிஷோர் மிரட்டினார். எனக்கு நடிகர் சுதீப்புடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற, ஆசை இருந்ததால் மவுனமாக இருந்தேன்.தற்போது நான் தயாரிக்கும், 'ராமதுாதா' திரைப்பட படப்பிடிப்பு முடிந்துள்ளது. ரிலீஸ் செய்ய என்னிடம் பணம் இல்லை. எனவே என் பணத்தை தாருங்கள் என, நந்த கிஷோரிடம் கேட்டேன். பணம் தர முடியாது. என்ன செய்கிறாயோ, செய்து கொள் என, அலட்சியமாக கூறுகிறார்.இத்தகைய இயக்குநர்கள் மத்தியில், என்னை போன்ற சிறு கலைஞர்கள் எப்படி வாழ்வது என்று தெரியவில்லை. என் பணத்தை திருப்பித் தராவிட்டால், நந்த கிஷோர் மீது சட்டப்படி வழக்கு தொடர்வேன். திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, ஊடகத்தினர் இயக்குநர் நந்த கிஷோரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இப்போது நான் எதையும் பேச முடியாது. பணி நிமித்தமாக மும்பையில் இருக்கிறேன். சபரீஷ் ஷெட்டி வாய்க்கு வந்தபடி குற்றஞ்சாட்டுகிறார். அவருக்கு வக்கீலுடன் கலந்தாலோசித்த பின், சட்டப்படி பதில் அளிப்பேன். நானும் சபரீஷ் ஷெட்டி மீது புகார் அளிப்பேன்,” என்றார்.