விரைவில் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்ய ஆலோசனை
பெங்களூரு: பெங்களூருக்கு வந்துள்ள, காங்கிரஸ் தேசிய முதன்மை செயலர்கள் ரன்தீப்சிங் சுர்ஜாவாலா, வேணுகோபால் ஆகியோருடன், கர்நாடக முதல்வர், முன்னாள் முதல்வர், மாநில காங்., தலைவர் ஆலோசனை நடத்தினர். வரும் வாரம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா, ராஜினாமா செய்த பின், ஜூன் 3ம் தேதியன்று, சிவகுமார் முதல்வராக பதவியேற்றார். அவருடன் 13 அமைச்சர்கள் மட்டுமே பதவி ஏற்றனர். மற்ற 21 இடங்கள், ஒரே மாதத்தில் நிரப்பப்படும் என, கூறப்பட்டது. ஆனால் இதுவரை விரிவாக்கம் செய்யப்படவில்லை. அமைச்சர் பதவி கேட்டு, எம்.எல்.ஏ.,க்கள் பலரும், டில்லிக்கு சென்று, ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும்படி, முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வெளி நாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால், அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது. அவர் கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்து திரும்பினார். எனவே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என, எதிர்பார்த்தனர். ஆனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தை எழுப்பி, மாணவர்கள் போராட்டம் நடத்திய போது, டில்லி போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. எனவே, கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில், மேலிட தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் காங்., தேசிய செயலர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பெங்களூருக்கு நேற்று முன் தினம் வந்துள்ளனர். இவர்களுடன் முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் ஆலோசனை நடத்தினர். நேற்று முன் தினமே, சுர்ஜேவாலா டில்லிக்கு சென்றுவிட்டார். வேணுகோபால் பெங்களூரிலேயே தங்கி, தலைவர்களுடன் மீண்டும் ஆலோசித்த பின், நேற்று காலை டில்லி திரும்பினார். ஏற்கனவே உத்தேச அமைச்சர்கள் பட்டியல், தயார் நிலையில் உள்ளது. எனவே வரும் வாரம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.