விசாரணைக்கு ஆஜராக ஐஸ்வர்யாவுக்கு சம்மன்
பெங்களூரு: அரசியல்வாதிகளின் மொபைல் போன் அழைப்பு விபரங்களை பெற்ற வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி மோசடி பெண் ஐஸ்வர்யாவுக்கு, விஜயநகர் ஏ.சி.பி., சந்தன் சம்மன் அனுப்பி உள்ளார்.மாண்டியா மலவள்ளி கிருகாவலு கிராமத்தின் ஐஸ்வர்யா கவுடா, 32. இவர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, பெங்களூரு சந்திரா லே அவுட்டில் உள்ள நகைக்கடையில் 8 கோடி ரூபாய்க்கு, நகை வாங்கி மோசடி செய்தார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். ஆனால் அவர் மீது மேலும் நான்கு மோசடி வழக்குகள் பதிவாகின.ஐஸ்வர்யாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, மொபைல் போன்களை ஆய்வுக்கு அனுப்பிய போது, அரசியல்வாதிகளின் மொபைல் போன் அழைப்பு விபரங்களை சட்டவிரோதமாக பெற்றது தெரிந்தது.இதுகுறித்து பேட்ராயனபுரா உதவி போலீஸ் கமிஷனர் பரத் ரெட்டி அளித்த புகாரில், ஐஸ்வர்யா மீது வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, விஜயநகர் உதவி போலீஸ் கமிஷனர் சந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி ஐஸ்வர்யாவுக்கு, சந்தன் சம்மன் அனுப்பி உள்ளார். இதன்படி இன்று காலை 11:00 மணிக்கு விஜயநகரில் உள்ள சந்தன் அலுவலகத்தில், ஐஸ்வர்யா விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.இதற்கிடையில், தன் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யும்படி உயர் நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரிக்கிறார். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, ஐஸ்வர்யா தரப்பில் ஆஜரான வக்கீல் சுனில்குமார் வாதாடியதாவது:எனது மனுதாரர் மீது புகார் அளித்து உள்ள ஷில்பா கவுடா, விசாரணை அதிகாரி பரத் ரெடடியின் நெருங்கிய உறவினர் ஆவார். இதனால் எனது மனுதாரரை, விசாரணையின் போது பரத் ரெட்டி ஆபாசமாக திட்டி உள்ளார். வீட்டில் விபசாரம் செய்வதாக கூறி துன்புறுத்தி உள்ளார்.விசாரணையின் போது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு பதில், எழுத்துபூர்வ அறிக்கையில் கையெழுத்து போடும்படி மிரட்டி உள்ளார். தனக்கு மாதவிடாய் உள்ளது. ஐந்து நாட்கள் கழித்து விசாரணைக்கு ஆஜராகிறேன் என்று, எனது மனுதாரர் கூறிய போதும், விசாரணைக்கு வரவில்லை என்றால் வீட்டிற்கு, ஆம்புலன்ஸ் அனுப்பி வைப்பதாக கூறி துன்புறுத்தி உள்ளார். விசாரணை என்ற பெயரில் மனதளவில், எனது மனுதாரருக்கு நிறைய துன்புறுத்தல் நடந்து உள்ளது.இவ்வாறு அவர் வாதாடினார்.நீதிபதி பதில் மனு தாக்கல் செய்ய, அரசுக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.