| ADDED : நவ 20, 2025 03:53 AM
சாம்ராஜ்நகர்: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின், குரட்டி ஹோசூரு கிராமத்தில் வசிப்பவர் ஷில்பா, 24. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன் தினம் இரவு, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலில் கவுதல்லி மருத்துவமனைக்கு சென்றனர். அங்குள்ள டாக்டர்கள், கொள்ளேகாலுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். அதன்படி அங்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஷில்பாவுக்கு வலி அதிகரித்தது. இதனால் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ராணி மற்றும் நாகராஜு ஆம்புலன்சை சாலை ஓரமாக நிறுத்தினர். ஷில்பாவுக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் தாய், குழந்தையை கொள்ளேகால் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சமயோஜிதமாக செயல்பட்டு, பிரசவம் பார்த்ததால் இரண்டு உயிர்களும் காப்பாற்றப்பட்டன.