உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ‘அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை’

‘அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை’

மங்களூரு: குழந்தை இல்லாத தம்பதியரின் வசதிக்காக, மாநிலத்தின் நான்கு அரசு மருத்துவமனைகளில், ஐ.வி.எப்., எனும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் துவக்க, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் காதர் மங்களூரில் நேற்று அளித்த பேட்டி: திருமணம் நடந்து பல ஆண்டுகளாகியும், குழந்தையில்லாமல் பல தம்பதியர் அவதிப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில், ஐ.வி.எப்., சிகிச்சை பெற, லட்சக்கணக்கில் செலவாகும். ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களால், அவ்வளவு செலவிட முடியாது. எனவே இத்தகைய தம்பதியரின் வசதிக்காக, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ, ஐ.வி.எப்., சிகிச்சை அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது. மங்களூரின் லேடி கோஷன் மருத்துவமனையில், ஐ.வி.எப்., சிகிச்சை மையம் துவங்கப்படுகிறது. இதற்காக 5 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதே போன்று, பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளி அல்லது பெலகாவியிலும், ஐ.வி.எப்., சிகிச்சை மையம் துவக்க, நடவடிக்கை எடுக்கப்படும். மலட்டு தன்மை பிரச்னையால் அவதிப்படும் தம்பதியருக்கு, ஐ.வி.எப்., சிகிச்சை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சிகிச்சை பெற, தனியார் மருத்துவமனைகளில், இரண்டரை முதல் நான்கு லட்சம் ரூபாய் செலவாகும். ஒருவேளை முதல் முறை பயன் அளிக்காவிட்டால், மீண்டும் சிகிச்சை பெற வேண்டி வரும். இதனால் செலவு மேலும் அதிகரிக்கும். பொருளாதார வசதியுள்ள குடும்பத்தினர், தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சையை பெறுவதில் பிரச்னை இல்லை. ஆனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரால் அது முடியாது. இதை மனதில் கொண்டு, ஆயுஷ்மான் பாரத் – ஆரோக்கிய கர்நாடகா திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை குடும்பத்தினருக்கு, 60,000 ரூபாய் உதவித்தொகை வழங்க, அரசு ஆலோசித்தது. ஆனால் இத்திட்டத்தின் கீழ், ஐ.வி.எப்., சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள், ஆர்வம் காட்டவில்லை. எனவே அரசு மருத்துவமனைகளிலேயே, இந்த சிகிச்சையை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ வழங்க, அரசு முடிவு செய்தது, இந்த சிகிச்சை மையங்கள், செயல்பட துவங்கினால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத ஏழை தம்பதியரும், குழந்தை பெற உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை