உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்கும் கலைஞர்

புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்கும் கலைஞர்

பெங்களூரில் ஒருவர் 19 ஆண்டுகளாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பணம் இல்லாதவர்களிடம் முன் பணம் மட்டும் வாங்கிக் கொண்டு, 'விக்' தயாரித்து கொடுக்கிறார்.இந்தியாவில் 2025ல் இதுவரை 15.7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் 'தேசிய புற்றுநோய் பாதிப்பு தரவுகள் குறிப்பிட்டு உள்ளன.புற்றுநோய்க்கு மேற்கொள்ளப்படும் 'கீமோதெரபி'யால் வாந்தி, சோர்வு உட்பட பல பக்க விளைவுகள் ஏற்படும். இந்த சிகிச்சை முறையில் முடி கொட்டிவிடும். முடி கொட்டுவதால், பலரும் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பர்.

ஆபத்பாந்தவன்

இவர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறியவர் தான் மாரிசெட்டி குமார், 49. மாண்டியா மாவட்டம், பெலகாவடியில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கால்நடைகளை மேய்த்து வந்தார்.அன்றைய காலகட்டத்தில், சிவனசமுத்திரா நீர்வீழ்ச்சி அருகில் திரைப்பட படப்பிடிப்புகள் நடக்கும். கால்நடைகளை மேய்க்க செல்லும் இவர், இந்த படப்பிடிப்புகளை பார்த்து வந்தார். அப்போது அங்கு சிவாஜி என்ற ஒப்பனை கலைஞர் அறிமுகம் கிடைத்தது. நடிகர்களுக்கு விக், மீசை தயாரித்து கொடுத்து கொண்டிருந்தார். இத்தொழில் மீது, மாரிசெட்டி குமாருக்கு ஆர்வம் ஏற்பட்டது.தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறி, சிவாஜியிடம் உதவியாளராக சேர்ந்தார். பின், 1996ல் அவருடன் சென்னை சென்றார். அங்கு பல திரைப்படங்களில் பணியாற்றி, 'விக்' தயாரிக்கும் கலையை தெரிந்து கொண்டார்.

திரையுலகினர்

அதன்பின், 2006ல் பெங்களூரு வந்த மாரிசெட்டி குமார், பெங்களூரு ஜே.சி., நகர் குருபரஹள்ளியில் 8க்கு 14 அடி கடையில், சாண்டல்வுட் திரையுலகினருக்கு விக் தயாரித்து கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார்.மாரிசெட்டி குமார் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்:கன்னட திரையுலகினருக்கு விக் தயாரித்து கொடுக்கும் போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண், என்னை சந்தித்தார். தனக்கு உள்ள பாதிப்பு, அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து விளக்கினார்.இதையடுத்து அவருக்கு விக் தயாரித்து கொடுத்தேன். அன்றைய தினம் விக்கை அவரின் தலையில் வைத்து காண்பித்த போது, அப்பெண்ணின் மலர்ந்த புன்னகை, இன்னும் என் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அன்று முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு விக் தயாரித்து கொடுப்பதில் எனக்கு மன நிம்மதி ஏற்படுகிறது.இந்த விக்குகள் அனைத்தும் இயற்கையான தலைமுடியில் தயாரிக்கப்படுபவை. இதற்காக திருப்பதி, கொல்கட்டாவில் இருந்து வரவழைக்கிறேன். தலைமுடி வந்ததும், அடர்த்தி, உயரம் என தனித்தனியாக பிரித்து விடுவோம்.

10,000 ரூபாய்

முடியை நன்றாக சுத்தம் செய்து, வெந்நீரில் வேக வைத்து, மீண்டும் தண்ணீரில் கழுவுவோம். விக் அனைத்தையும் கைகளால் செய்யப்படுவதால், நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும். ஒவ்வொரு விக்கும் அதன் அடர்த்தி, உயரம் கொண்டு ஆரம்ப விலையாக 10,000 ரூபாய்க்கு விற்கிறேன்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, விக் கேட்டு வருவோரில் வசதி குறைவாக உள்ளவர்களாக இருந்தால், இதற்கான முன்பணம் மட்டுமே வாங்கிக் கொண்டும், சிலருக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறேன்.இதுவரை 12,000 க்கும் மேற்பட்ட புற்று நோயாளிகளுக்கு விக் தயாரித்து கொடுத்துள்ளேன். இதற்கு என் மனைவி லலிதா மிகவும் உறுதுணையாக உள்ளார். ஆனால், 'ரெடிமேட் சிந்தெடிக்' விக்குகள் குறைந்த விலையில் விற்கப்படுவதால், இத்தொழிலில் வருவாய் குறைந்து வருகிறது. கொரோனாவால் மேலும் பாதிப்பை அதிகரித்தது. என்னிடம் இரண்டு மூன்று பேர் வேலை செய்து வந்தனர். இப்போது நானும், என் மனைவியுமே இதில் ஈடுபட்டு வருகிறோம்.லாபத்துக்காக நாங்கள் பணியாற்றவில்லை. கடை வாடகை தரவும், குடும்ப செலவு, என் மகன் கல்விக்கு பணம் தேவை இருப்பதால், இலவசமாக கொடுப்பதை விடுத்து, முன்பணம் மட்டும் வாங்கிக் கொண்டு வழங்கி வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.விக் தேவைப்படுவோர், 99800 43121 என்ற மொபைல் போனில் அழைக்கலாம் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி