| ADDED : டிச 05, 2025 10:20 AM
பெங்களூரு: ''காங்கிரஸ் ஆட்சியில் 63 சதவீத கமிஷன் வாங்கப்படுவது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.'' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் ஆட்சியில் 63 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக, துணை லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா கூறி உள்ளார். ஆட்சியில் இருப்பவர்களுக்கு மானம், மரியாதை இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும். பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் வாங்கியதாக, எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டனர். இப்போது 63 சதவீத கமிஷன் பற்றி விசாரிக்க, எந்த விசாரணைக்கு உத்தரவிடுவர். உண்மை வெளிவர சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு முதல்வருக்கு தைரியம் உள்ளதா. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 187 கோடி ரூபாய், லோக்சபா தேர்தலில் பல்லாரி தொகுதிக்கு பயன்படுத்தப்பட்டது. இன்னும் நிறைய துறைகளில் ஊழல் செய்து உள்ளனர். கர்நாடகாவை ஏ.டி.எம்., ஆக சோனியா, ராகுல் பயன்படுத்துகின்றனர். பணம் கொடுப்பவர்களுக்கு பதவி கிடைக்கிறது. காங்கிரஸ் ஊழலின் கடவுளாக உள்ளது. அரசில் உள்ள முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அலிபாபாவும், 40 திருடர்களும் போன்றவர்கள். கமிஷன் கொடுக்காமல் இங்கு எதுவும் நடக்காது. ஊழலில் கர்நாடகா 5வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.