உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 11 பேர் பலிக்கு அரசே பொறுப்பு: சட்டசபையில் அசோக் பாய்ச்சல்

11 பேர் பலிக்கு அரசே பொறுப்பு: சட்டசபையில் அசோக் பாய்ச்சல்

பெங்களூரு: ''ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் ஆர்.சி.பி., அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசே முழு பொறுப்பு,'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றஞ்சாட்டினர். சட்டசபையில், விதி எண்: 69ன் கீழ் பா.ஜ., - அசோக் பேசியதாவது: இந்தாண்டு நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், ஆர்.சி.பி., அணி வெற்றி பெற்றது. மூன்றாவது நாளே பெங்களூருக்கு வரவழைத்து, ரோடு ஷோ மற்றும் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது. விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானம் அருகிலும் லட்சக்கணக்கான பேர் திரண்டனர். இந்த வேளையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில், 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம், முதல்வர் சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கையில், பெரும் கரும்புள்ளியாக என்றும் இருக்கும். ஆர்.சி.பி., வெற்றியில் லாபம் பெறுவதற்கு, அரசு முயன்றதால் தான், இந்த சம்பவம் நிகழ்ந்தது. இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விதான் சவுதா முன் கொண்டாடுவதற்கு, முதல்வர், துணை முதல்வர் அனுமதி அளித்திருப்பது ஆவணங்களில் பதிவாகி உள்ளது. நிர்வாக, சீர்திருத்தத்துறை செயலர், மிகவும் அவசரம் என்று குறிப்பிட்ட கடிதமும் உள்ளது. மேலும், உடனடியாக வெற்றி கொண்டாட்டம் ஏற்பாடு செய்ய வேண்டுமெனில், விதான் சவுதாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் உட்பட 10 அம்சங்கள் அடங்கிய கடிதத்தை, தலைமை செயலருக்கு, நிர்வாக, சீர்திருத்தத் துறை கடிதம் எழுதியிருந்தது. இதை, முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வராதது ஏன்? கவர்னருக்கு போன் செய்து, முதல்வரே பாராட்டு விழாவுக்கு அழைத்துள்ளார். எனவே, இந்த சம்பவத்துக்கு அரசு தான், முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அரசின் அலட்சியத்தால் தான், 11 பேர் உயிரிழந்தனர். இனியும் கூட்ட நெரிசல் இறக்கும் சம்பவங்கள் நடக்காதவாறு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை