ராய்ச்சூர்: ராய்ச்சூரில் நிலத்தகராறு குறித்து விசாரிக்க, 'சிவில்' உடையில் சென்ற கூடுதல் எஸ்.ஐ.,யை ஒரு தம்பதி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசுகூர் தாலுகாவில் உள்ள மத்துார் கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராமப்பா கிருஷ்ணா, 35, சக்குபாய், 30, தம்பதிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. வாய்த்தகராறு சண்டையாக மாறியதில் மல்லப்பாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மல்லப்பா, முட்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க கூடுதல் எஸ்.ஐ., வெங்கடப்பா நாயக், 'சிவில்' உடையில் ராமப்பாவின் வீட்டுக்கு நேற்று சென்றார். அப்போது, மல்லப்பாவும் உடனிருந்தார். சம்பவம் குறித்து ராமப்பா, சக்குபாய் ஆகிய இருவரிடமும் வெங்கடப்பா விசாரித்தார். அவர் கேட்ட கேள்விகளால் ஆத்திரமடைந்த தம்பதி, கூடுதல் எஸ்.ஐ., வெங்கடப்பா நாயக்கை தாக்கினர். அவரது மொபைல் போனை பிடுங்கி வைத்துக் கொண்டு, உடைகளை கிழித்து, துாணில் கட்டிவைத்து அடித்தனர். அவரை தாக்குவதற்கு அங்கிருந்த சிலரும் உதவியதாக கூறப்படுகிறது. உடன் வந்த மல்லப்பாவும் தாக்கப்பட்டார். இதுகுறித்து முட்கல் எஸ்.ஐ., வெங்க டேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசாருடன் வந்த எஸ்.ஐ., வெங்கடேசையும் தம்பதி தாக்கினர். இதனால், போலீசாரும் இருவரையும் அடித்து, கைது செய்தனர். காயம் அடைந்த கூடுதல் எஸ்.ஐ., வெங்கடப்பா, எஸ்.ஐ., வெங்கடேஷ் ஆகியோர் லிங்கசுகூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.