பெண் விவகாரத்தில் ரிக்கி ராயை கொல்ல முயற்சி?
பெங்களூரு: மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மகன் ரிக்கி ராயை, பெண் விவகாரத்தில் கொலை செய்யும் முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராய். கடந்த 19ம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு ராம்நகரின் பிடதியில் வைத்து ரிக்கி ராய் சென்ற கார் மீது, மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.கார் கதவு இடித்ததில் மூக்கில் காயமடைந்த ரிக்கி ராய், பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். டிரைவர் பசவராஜ் அளித்த புகாரில் முத்தப்பா ராயின் இரண்டாவது மனைவி அனுராதா உட்பட 4 பேர் மீது பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்குவதற்கு கொடிகேஹள்ளியில் உள்ள அனுராதா வீட்டிற்கு நேற்று போலீசார் சென்றனர். ஆனால் அவர் கடந்த 14ம் தேதியே, அமெரிக்காவுக்கு சென்றது தெரிந்தது. ரிக்கி ராயை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்துவிட்டு அவர் தப்பியதாக கூறப்படுகிறது.இதனால் மற்ற மூன்று பேருக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்புவதற்கு போலீசார் தயாராகி வருகின்றனர்.இதற்கிடையில் நிழல் உலக தாதாவாக இருந்தபோது முத்தப்பா ராய், எத்தனை துப்பாக்கி வைத்திருந்தார், தற்போது அதில் எத்தனை துப்பாக்கிகள் உள்ளன என்பதை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.ரிக்கி ராயும் போலீசாரிடம் அனுமதி பெற்று துப்பாக்கி பயன்படுத்தி வந்தார். அந்தத் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ள போலீசார், எத்தனை குண்டுகளை பயன்படுத்தி உள்ளார் என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.ரிக்கி பெயரில் மட்டும் 1,000 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. பெண் விவகாரத்தில் ரிக்கி ராயை தீர்த்தக்கட்ட முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ரிக்கி ராயின் பண்ணை வீட்டில் வேலை செய்பவர்களிடமும் விசாரணை நடக்கிறது.