உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு ஜாமின் மறுப்பு

சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு ஜாமின் மறுப்பு

பெங்களூரு : சிறுமியை பலாத்காரம் செய்த, முதியவருக்கு ஜாமின் வழங்க, உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாண்டியாவின் கே.ஆர்.பேட்டை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. உணவு வாங்கித் தருவதாகக் கூறி தன்னை 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக, சிறுமி அதிர்ச்சிகரமான தகவலை கூறினார். சிறுமியின் தாய் அளித்த புகாரில், கே.ஆர்.பேட் ரூரல் போலீசார், சன்னப்பர், 68, என்பவர் உட்பட 5 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஜாமின் கேட்டு சன்னப்பர் தாக்கல் செய்த மனுவை, மாண்டியா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி ராசய்யா விசாரித்தார். மனு மீதான இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி ராசய்யா கூறுகையில், ''பாதிக்கப்பட்ட சிறுமி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். அவர் வீட்டில் நிலவும் வறுமை, அப்பாவித்தனத்தை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது இரக்கமற்ற செயல். ஜாமின் கேட்டு இருப்பவர் வயதான நபர். மற்றவர்கள் தவறு செய்யும்போது தடுத்திருக்க வேண்டும். ஆனால் அவரே, சிறுமியை பலாத்காரம் செய்திருப்பது மூர்க்கத்தனமானது. ஜாமின் பெற அவருக்கு தகுதி இல்லை,'' என கூறி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ