உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஜ்ரங் தள் தொண்டர் வெட்டி கொலை

பஜ்ரங் தள் தொண்டர் வெட்டி கொலை

மங்களூரு: பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலையை கண்டித்து, மங்களூரில் நேற்று கடை அடைப்பு நடந்தது. போராட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினர் சாலையில் டயர்களை போட்டு எரித்தனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மங்களூரில் 6ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.தட்சிண கன்னடாவின் பன்ட்வால் தாலுகா, புலிமயலு கிராமத்தை சேர்ந்தவர் சுகாஸ் ஷெட்டி, 30; பஜ்ரங் தள் தொண்டர். ரவுடியான இவர் மீது சில வழக்குகள் உள்ளன. கடந்த 2022ல் சூரத்கல்லை சேர்ந்த முகமது பாசில் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக, சுகாஸ் ஷெட்டி பெயர் சேர்க்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், கடந்த ஆண்டு ஜாமினில் வந்தார்.நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் மங்களூரின் பஜ்பே கின்னிபதவு பகுதியில், சுகாஸ் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் காரில் சென்றார். அப்போது சரக்கு ஆட்டோ ஒன்று, கார் மீது மோதியது. சரக்கு ஆட்டோவில் இருந்து இறங்கிய ஆறு பேர், சுகாசை காரில் இருந்து வெளியே இழுத்தனர். நடுரோட்டில் அவரை தள்ளி சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு தப்பினர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார்.

கத்திக்குத்து

சுகாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம், தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்ட பஜ்ரங் தள், பல்வேறு ஹிந்து அமைப்பினர் இடையில் கோபத்தை ஏற்படுத்தியது. சுகாஸ் உடல் இருந்த மருத்துவமனை முன், ஹிந்து அமைப்பினர் கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சுகாஸ் மீது தாக்குதல் நடந்த இடத்தில், மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால், பஜ்பே போலீசார் ஆய்வு செய்தனர். இதற்கிடையில் சுகாஸ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், மங்களூரில் வேறு பிரிவை சேர்ந்த 2 வாலிபர்கள்; உடுப்பியில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.அவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நிலைமையை கட்டுப்படுத்த வேறு மாவட்டங்களில் இருந்து, பாதுகாப்பு பணிக்கு போலீசார் அழைக்கப்பட்டு, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கல்வீச்சு

சுகாஸ் கொலையை கண்டித்து, தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு வி.எச்.பி., அமைப்பு அழைப்பு விடுத்தது.மங்களூரில் நேற்று கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. மங்களூரில் 3 தனியார் பஸ்கள் மீது கல்வீசப்பட்டன. மூடபித்ரி, சூரத்கல், சுள்ளியா, புத்துாரில் சாலையில் டயர்களை போட்டு எரித்து, ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து, சுகாஸ் உடல் அவரது சொந்த ஊரான புலிமயலு கிராமத்திற்கு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஹிந்து அமைப்பினர் வழிநெடுக நின்று அஞ்சலி செலுத்தினர்.சுகாஸ் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, ஹிந்து அமைப்பின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அசம்பாவித சம்பவத்தை தடுக்கும் வகையில், மங்களூரில் வரும் 6ம் தேதி காலை 6:00 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.மதுபான கடைகளை மூடவும் கலெக்டர் முல்லை முகிலன் உத்தரவிட்டு உள்ளார். சுஹாஸ் கொலையை பா.ஜ., தலைவர்கள் கடுமையாக கண்டித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை