பெண்களுக்கு வாழ்வளிக்கும் வாழை நார்
கொப்பால் மாவட்டம் கங்காவதியில் உள்ளது ஆனேகுந்தி கிராமம். வாழை கைவினை பொருட்களில் புதுமை செய்ததன் மூலம், இக்கிராமத்திற்கு புதிய முகம் கிடைத்துள்ளது. விஜயநகரா மாவட்டம் ஹம்பி நகரில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் ஆனேகுந்தி உள்ளது. விஜயநகர பேரரசின் தலைநகராக திகழ்ந்தது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கிராமத்தினர் கலாசாரம், வரலாற்று முக்கியத்துவத்தை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். கிஷ்கிந்தா அறக்கட்டளையை ஷாமா பவார் என்பவர், 1997ல் நிறுவினார். வாழை நார் கைவினை பொருட்கள் தயாரிப்பு; பெண்களுக்கு அதிகாரம், இயற்கை வளங்கள் மறுசுழற்சி ஆகியவற்றை நோக்கமாக கொண்டு உள்ளது. இக்கிராமத்தில் வாழை அதிகம் விளைவிக்கப்படும். வாழை நார் மூலம் கைவினை பொருட்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. 1998ல் உள்ளூர் பெண்கள், வாழை நார் தயாரிப்புகளை உருவாக்கினர். இதற்காக, அவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாழை நார்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை; மட்கும் தன்மை கொண்டவை; மணமற்றவை. இங்கு மூன்று வாழை நார் உற்பத்தி மையங்கள் உள்ளன. ஒரு மையம் கயிறு தயாரிப்பதிலும்; மற்றொரு மையம் உள்நாட்டில் விற்பனை செய்வதிலும்; மூன்றாவது மையம் பின்லாந்து நாட்டுடன் இணைந்து ஏற்றுமதி செய்வதிலும் ஈடுபட்டு உள்ளன. வாழை தண்டுகளின் அடுக்குகளை பிரித்து, கொதிக்கும் தண்ணீரில் ஊற வைப்பர். இவை மென்மையாக மாறும்போது, அடுக்குகள் தனி தனியாக பிரியும். ஒரு அடுக்கு வீணானாலும், மற்றொன்று கை கொடுக்கும். இதன் மூலம் வாழை நார் தயாரிக்கப்படும்; கூடைகள், பைகள், தொப்பிகள், பாய்கள், புகைப்பட சட்டங்கள், பெட்டிகள் போன்ற பொருட்களை உருவாக்கலாம். வாழை நார் தயாரிப்புகள், உள்ளூர் பெண் கைவினைஞர்கள், உள்ளூர் விவசாயிகளின் வாழ்விற்கு ஆதாரமாக உள்ளன. - நமது நிருபர் -