அல்லா ஹு அக்பர் என கத்தியபடி சுவாமி சிலையை உடைத்த வங்கதேச நபர் கைது
மாரத்தஹள்ளி: 'அல்லா ஹு அக்பர்' என்று கத்தியபடி, கோவிலுக்குள் புகுந்து சாமி சிலையை உடைத்த வங்கதேச நபர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மாரத்தஹள்ளி அருகே தேவரபீசனஹள்ளியில் வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் உள்ள 'மெடிக்கல் ஸ்டோர்' முன் விநாயகர் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மெடிக்கலுக்கு வந்த ஒருவர், விநாயகர் புகைப்படத்தை கம்பால் அடித்து உடைத்தார். மெடிக்கலுக்கு வந்தவர்கள், அந்த நபரை பிடிக்க முயன்றனர். அங்கிருந்து தப்பி ஓடியவர் நேராக, வேணுகோபாலசுவாமி கோவிலுக்குள் சென்றார். 'அல்லா ஹு அக்பர்' என்று கத்தியபடி, காலில் செருப்புடன் கோவிலுக்குள் சென்று, துவாரபாலகர் சிலையை பிடித்து இழுத்தார். கீழே விழுந்து சிலை உடைந்தது. செருப்பு காலால் உடைந்த சிலையை மிதித்தார். கையில் இருந்த கம்பால், கருட கம்பத்தையும் அடித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள், அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்கள், பக்தர்கள் உதவியுடன் கோவில் முன் உள்ள மரத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்த மாரத்தஹள்ளி போலீசார், கோவிலுக்கு சென்று அந்த நபரை மீட்டனர். விசாரணையில் அவர், வங்கதேசத்தின் கபீர், 35, என்பதும், பெங்களூரில் ஐந்து ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்து வருவதும் தெரிந்தது. வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் வழியாக இந்தியாவில் நுழைந்த அவர், அங்கிருந்து பெங்களூரு வந்ததும், இங்கு செருப்பு தைக்கும் சிறிய கடை நடத்தியதும் தெரிந்தது. தர்ம அடி வாங்கியதில் கபீர் காயம் அடைந்தார். அவரை கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்தனர். 'டிஸ்சார்ஜ் ஆன பிறகு அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.