வாட்டர் போட்டுகள் வாங்க பெங்களூரு மாநகராட்சி திட்டம்
பெங்களூரு: மழைக்காலத்தில் பெங்களூரின் பல்வேறு இடங்களில், வெள்ளம் சூழ்கிறது. இங்கிருந்து மக்களை காப்பாற்ற, 'வாட்டர் போட்'கள் வாங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆண்டு தோறும் மழைக்காலம் நெருங்கினால், பெங்களூரு மக்கள் அஞ்சும் நிலை வந்து விட்டது. நகரில் சாதாரண மழை பெய்தாலே, சாலைகள் ஏரிகளாக மாறிவிடும். பல்வேறு லே - அவுட்களில் வெள்ளம் சூழும். சமீபத்தில் பெய்த மழையால், மூன்று நாட்கள் வெள்ளம் சூழப்பட்ட சாய் லே - அவுட்டில் சிக்கிய பொது மக்களை, வெளியே அழைத்து வர போட்கள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது.இதை தீவிரமாக கருதிய பெங்களூரு மாநகராட்சி, மழைக்காலத்தில் பயன்படுத்த போட்கள் வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக டெண்டர் அழைக்க தயாராகிறது. பெங்களூரு மாநகராட்சியின் எட்டு மண்டலங்களுக்கும் தலா ஒரு போட்கள், லைப் ஜாக்கெட்களும் வாங்கப்படவுள்ளன.பெங்களூரில் பாழாகி கிடக்கும் சாலைகளை சீரமைத்து, பள்ளங்களை மூடி, கால்வாய்களில் மண்ணை அள்ளி, மழை நீர் தடையின்றி பாய்வதற்கு வழி செய்வதற்கு பதில், மக்களை காப்பாற்ற போட் வாங்கும் மாநகராட்சியின் திட்டத்துக்கு பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.