உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு தெற்கு மாவட்டமானது ராம்நகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது அரசு 

பெங்களூரு தெற்கு மாவட்டமானது ராம்நகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது அரசு 

பெங்களூரு: ராம்நகர், பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாறி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டது.கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், ராம்நகர் மாவட்டத்தின் கனகபுரா தாலுகா தொட்டஆலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர். 'ராம்நகர் மாவட்ட மக்கள் தங்கள் நிலத்தை குறைந்த விலைக்கு யாரிடமும் விற்று விட வேண்டாம்; கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ராம்நகர் மாவட்டம் பெங்களூரு தெற்காக மாறும். உங்கள் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயரும். நாம் அனைவரும் பெங்களூரு மாவட்டத்துக்காரர்கள்' என்று கடந்த ஆண்டு அறிவித்தார்.இதற்கு பா.ஜ., - ம.ஜ.த., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராம்நகர் மாவட்டத்தில் உள்ள தனது சொத்து மதிப்புகளை உயர்த்தவே, ராம்நகரை பெங்களூரு தெற்கு மாவட்டமாக்க சிவகுமார் முயற்சிக்கிறார் என்று கூறினர்.ஆனால் ராம்நகர் மாவட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பவில்லை. இது சிவகுமாருக்கு சாதகமாக மாறியது.

தலைநகர்

ராம்நகரை, பெங்களூரு தெற்கு மாவட்டமாக்கும் அனைத்து முயற்சிகளையும் செய்து வந்தார். அவரது முயற்சிக்கு நேற்று முன்தினம் வெற்றி கிடைத்தது. ராம்நகரை, பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்ற அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று வருவாய்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'கர்நாடக நில வருவாய் சட்டம் 1964 பிரிவு 4 (4ஏ) ன் கீழ், ராம்நகர் மாவட்டத்தின் பெயர் பெங்களூரு தெற்கு மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட தலைநகராக ராம்நகர் இருக்கும்' என்று கூறப்பட்டு இருந்தது.

அதிகாரம்

முன்னதாக நேற்று காலை மைசூரில் முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், ''ராம்நகர் பெயரை பெங்களூரு தெற்கு என்று மாற்றி, மாவட்டத்தின் வரலாற்றை சிதைப்பதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகிறார். ராம்நகர் மக்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவு செய்து உள்ளோம்,'' என்றார்.

மெட்ராஸ்

துணை முதல்வர் சிவகுமார் விஜயபுராவில் நேற்று அளித்த பேட்டி:ராம்நகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என்று மாற்றி உள்ளோம். ஊர் பெயர் பலகையை தங்க முலாமில் வைப்பரா என்று மத்திய அமைச்சர் குமாரசாமி கேட்கிறார். ஹாசனை சேர்ந்த அவர், அரசியல் செய்ய ராம்நகருக்கு ஏன் வந்தார்.நாங்கள் பெங்களூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஊரின் பெயருக்கும் சொந்த வரலாறு உண்டு. மெட்ராஸ் ஏன் சென்னை என்று அழைக்கப்படுகிறது. எங்கள் ஊர் விஷயத்தில் குமாரசாமிக்கு என்ன பிரச்னை.எனது சொத்துக்கள் மதிப்பை உயர்த்த, ராம்நகர் மாவட்டம் பெங்களூரு தெற்கு என்று மாற்றப்படுவதாக எதிர்க்கட்சியினர் கூறுவதை பற்றி கவலைப்பட மாட்டேன். எனக்கு ராம்நகர் மாவட்ட மக்கள் தான் முக்கியம்.அவர்களின் சொத்து மதிப்பு அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் நலமாக இருக்க வேண்டும். இங்கும் நிறைய முதலீடுகள் வர வேண்டும். வளர்ச்சி தான் எங்கள் விருப்பம்.இவ்வாறு கூறினார்.மத்திய அமைச்சர் குமாரசாமி டில்லியில் அளித்த பேட்டி:கடந்த 2007ல் நான் முதல்வராக இருந்த போது, ராம்நகர் மாவட்டத்தை உருவாக்கினேன். இந்த மாவட்டம் மூன்று முதல்வர்களை கொடுத்து உள்ளது. உலகமே வியக்கும் வகையில் விதான் சவுதாவை கட்டிய கெங்கல் ஹனுமந்தய்யா ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.பெங்களூரு தெற்கு மாவட்டம் என்று மாற்றுவதற்கு பதில், கெங்கல் ஹனுமந்தய்யா மாவட்டம் என்று பெயர் வைத்திருந்தால் அரசை நான் வாழ்த்தி இருப்பேன்.கெங்கல் ஹனுமந்தய்யா பெயர் வைத்தால், துணை முதல்வரின் நிலத்திற்கு மதிப்பு இருக்காது. மாவட்டத்தின் பெயரை ஏன் மாற்றினர். இதன் பின்னணியில் உள்ள தீய நோக்கம் என்ன என்று எனக்கு தெரியும்.ராம்நகர் மாவட்ட பெயரை மாற்ற மத்திய அரசிடம் முன்மொழிவு சமர்பித்தது பற்றி எனக்கு தெரியாது. இவர்கள் என்னென்றும் அதிகாரத்தில் நீடிப்பார்களா. எதிர்காலத்தில் அரசு மாறும். இந்த ஆள் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரி. என்ன யுக்தியை பயன்படுத்தினால் நில மதிப்பு உயரும் என்று அவருக்கு நன்கு தெரியும்.பிடதியில் உள்ள எனது நிலத்தையும் அபகரிக்க முயற்சி நடக்கிறது. நான் 40 ஆண்டுக்கு முன்பு வாங்கிய நிலத்திற்காக என்னை துன்புறுத்துகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.பெங்களூருக்கு மிக அருகில் ராம்நகர் மாவட்டம் இருந்தால், உலக அளவில் தெரியவில்லை. இப்போது பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாறி இருப்பதால், ராம்நகர் மாவட்ட மக்களுக்கு அதிர்ஷ்டம் தான்.இனி தங்களை பெங்களூருகாரர்கள் என்று பெருமையுடன் சொல்லி கொள்ளலாம். நிலத்தின் மதிப்பும் உயரும். வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இதனால் அரசின் முடிவுக்கு பொதுமக்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை