| ADDED : ஆக 25, 2026 01:06 AM
பெங்களூரு: ஓணத்தை ஒட்டி, பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆறரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. கேரள மாநிலத்தில் நாளை ஓணம் கொண்டாடப்படுகிறது. இதற்காக பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு நேற்று முன்தினம் அதிகாலை 5:10 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட தயாராக இருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக 5:20 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின், 8:45 மணி என்றனர். அதனை தொடர்ந்து 11:10 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டது. இறுதியாக, பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, 11:45 மணிக்கு, அதாவது ஆறரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால், அதிகாலை முதலே ரயிலில் நிலையத்தில் காத்திருந்த பயணியர் சோர்வடைந்தனர். இவர்களுக்காக ரயில்வே அதிகாரிகள், சிற்றுண்டி ஏற்பாடு செய்து கொடுத்தனர். இது குறித்து தென்மேற்கு ரயில்வே பெங்களூரு கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் ரயிலின் அச்சுகள் அதிக வெப்பம் அடைந்ததால், அதன் சக்கரங்கள் சுழலவில்லை. இதனை சரி செய்யவே, பல மணி நேரமானது. தொழில்நுட்ப கோளாறு மற்றும் பிரேக் பழுது காரணமாக, அச்சு இறுக்கமாக இருக்கும். இந்த உராய்வின் காரணத்தால், அச்சு சூடாகிறது. இதை சரி செய்யாமல் இயக்கினால், பேரிங் அறுந்து, ரயில் தடம் புரள வாய்ப்பு உள்ளது. மேலும், அச்சு சுழலவில்லை என்றால், தீ விபத்து ஏற்பட்டு, பெரிய விபத்து நிகழக்கூடும். இதன் காரணமாகவே, தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.