உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பலாத்காரத்தில் 5 வயது சிறுமி கொலை பீஹார் குற்றவாளி என்கவுன்டர்

பலாத்காரத்தில் 5 வயது சிறுமி கொலை பீஹார் குற்றவாளி என்கவுன்டர்

ஹூப்பள்ளி : ஹூப்பள்ளியில், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்த பீஹார் நபரை போலீசார், 'என்கவுன்டர்' செய்தனர்.கர்நாடக மாநிலம், கொப்பாலை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஹூப்பள்ளி அசோக் நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர், தினமும் தன் 5 வயது பெண் குழந்தையுடன் வேலைக்கு செல்வது வழக்கம்.நேற்று காலை 7:00 மணி அளவில், வழக்கம் போல வீட்டு வேலைக்கு வந்தார். தன் குழந்தையை வீதியில் விளையாட விட்டுவிட்டு, வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். விளையாடி கொண்டிருந்த சிறுமியை, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சாக்லேட் கொடுத்து துாக்கி சென்றார். அருகில் இருந்த ஷெட்டுக்குள் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தப்பியோட்டம்

இதனால், சிறுமி கத்தி கூச்சலிட்டு உள்ளார். சத்தத்தை கேட்ட சிலர் ஷெட்டிற்குள் சென்று பார்த்தபோது, சிறுமி மூச்சு, பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தார். கூட்டத்தினரை பார்த்ததும் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த தாயும் கதறி அழுதார். இவ்விஷயம் அப்பகுதியில் வேகமாக பரவியது.ஆத்திரமடைந்த அப்பகுதியினர், அசோக் நகர் போலீஸ் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'பலாத்காரம் செய்த நபரை சுட்டு கொல்ல வேண்டும். இல்லையெனில் அவரை, எங்களிடம் ஒப்படையுங்கள்' என்று ஆத்திரமாக கூறினர். போராட்டத்தில் மாவட்ட நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவர் சாகிர் சனாதி, கவுன்சிலர்கள் சந்தோஷ் சவுகான், நிரஞ்சன் ஹிரேமத், முன்னாள் கவுன்சிலர்கள் சித்து மொகலிஷெட்டர் மற்றும் அப்பகுதியினர் ஈடுபட்டனர். போராட்டம் நேற்று மாலை வரை நீடித்தது.போராட்டக்காரர்கள் டயர்களை, சாலையில் போட்டு எரித்து, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தபடியே இருந்தது. ஹூப்பள்ளி - தார்வாட் போலீஸ் கமிஷனர் சசிகுமார், சிறுமியின் பெற்றோர், போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார்.'குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார். அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படும்' என உறுதி அளித்தார்.

பீஹார் தொழிலாளி

இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. கேமராவில், சிறுமியை வாலிபர் துாக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.விசாரணையில், அந்த நபர் பீஹாரை சேர்ந்த ரித்தேஷ் குமார், 35, எனவும், அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக இரண்டு மாதமாக வேலை செய்து வந்ததும் தெரிந்தது.அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ரித்தேஷ் குமார் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.அவரை, அசோக் நகர் பெண் எஸ்.ஐ., அன்னபூர்ணா தலைமையிலான போலீசார், கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அந்நபர், போலீசாரை கற்களால் தாக்க துவங்கினார். இதில், போலீஸ் ஏட்டுகள் யஷ்வந்த், வீரேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர்.இதனால், எஸ்.ஐ., அன்னபூர்ணா வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தார். இருப்பினும் ரித்தேஷ், போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். இதனால், அவரது காலிலும், முதுகிலும் எஸ்.ஐ., சுட்டார். இதில், ரித்தேஷ் சுருண்டு விழுந்தார். அவரை, கே.எம்.சி., மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.காயம் அடைந்த போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள், குற்றவாளி 'என்கவுன்டர்' செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை