நிதி நிறுவனங்கள் அட்டகாசம் மூவர் மீது பா.ஜ., குற்றச்சாட்டு
பெங்களூரு: 'கர்நாடகாவில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கும், கடந்த ஆறு மாதங்களாக கிரஹ லட்சுமி திட்டத்துக்கு பணம் வராமல் இருப்பதற்கும் மூவர் மட்டுமே காரணம்' என, ம.ஜ.த., குற்றஞ்சாட்டி உள்ளது.'எக்ஸ்' பக்கத்தில் ம.ஜ.த., வெளியிட்டுள்ள பதிவு: மாநிலத்தில் உள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரே நேரடி காரணம். ஒவ்வொரு மாதமும் 2,000 ரூபாய் பணம் டிபாசிட் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த காங்கிரஸ், இப்போது ஆறு மாதங்களாக 'கிரஹலட்சுமி' திட்ட பணத்தை வழங்கவில்லை. இதை நம்பி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கியவர்கள், வட்டி செலுத்த முடியாமல் துன்பப்பட்டு, நிறுவனங்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து, தற்கொலை செய்து கொள்கின்றனர்.தன்னை நிதி நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் 'சாலராமையா' (கடன் ராமையா), வாக்குறுதி திட்டத்தால், மாநிலத்தை நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளார். மாநிலத்தின் வருவாயை பெருக்க தவறிவிட்டார். இதற்காக வாங்கப்பட்ட கடன் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.வாங்கிய அசலை விட, வட்டி அதிகமாக உள்ளது. இது மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மாநில காங்கிரஸ் அரசு செயல்பட்டால், ஆட்சியில் இருந்து இறங்கும்போது, கர்நாடக மாநிலம் திவாலாக மாறியிருக்கும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.