ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவிப்பு
பெங்களூரு,: ''காங்கிரஸ் அரசின் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் கொள்கை குறித்து, ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம்,'' என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவித்துள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடக சட்டசபை வரலாற்றில் ஒரே நேரத்தில் 18 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மாநில அரசின் தாளத்திற்கு ஏற்ப, சபாநாயகர் காதர் நடனமாடி உள்ளார். இது கண்டிக்கத்தக்கது. எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் உத்தரவை, சபாநாயகர் உடனே திரும்பப் பெற வேண்டும்.சபாநாயகர் எடுத்த முடிவு சட்டவிரோதமானது, ஒருதலைபட்சமானது. எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்து இருப்பதனால், தொகுதி மக்களை சபாநாயகர் அவமதித்து உள்ளார். 18 எம்.எல்.ஏ.,க்களும் பயங்கரவாதிகளா?முஸ்லிம்களை திருப்திபடுத்துவதற்காக அரசு பணி டெண்டர்களில் ஒரு கோடி வரையிலான பணிகளுக்காக 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். ஹிந்துக்களில் ஏழைகளே இல்லையா?நமது அரசியலமைப்பு சட்டம் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை. முஸ்லிம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று கல்வி கற்க, அவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை; முஸ்லிம் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சிக்காக பட்ஜெட்டில் பணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹிந்து மாணவர்களுக்கு வெளிநாட்டு சென்று படிக்கும் ஆசை இல்லையா?மாநிலத்தில் ஹிந்து பெண்கள், லவ் ஜிகாத்திற்கு பலியாகி வருகின்றனர். காங்கிரஸ் அரசின் முஸ்லிம்களை திருப்திபடுத்தும் கொள்கை பற்றி, ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம்.வரும் 24ம் தேதி முதல் போராட்டத்தை துவங்குவோம். முதல்வர் சித்தராமையா ஹிந்து விரோத கொள்கையை பின்பற்றி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.