உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 3,000 ஓட்டுகளை வாங்கிய விவகாரம் விசாரிக்க பா.ஜ., - எம்.பி., கோரிக்கை

3,000 ஓட்டுகளை வாங்கிய விவகாரம் விசாரிக்க பா.ஜ., - எம்.பி., கோரிக்கை

பெங்களூரு: பாதாமியில் சித்தராமையா, 3,--000 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றதாக இப்ராகிம் கூறியுள்ளார். இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என, ராஜ்யசபா பா.ஜ., - எம்.பி., லேஹர் சிங், தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ஓட்டுகள் திருட்டு நடந்துள்ளதாக, குற்றம்சாட்டிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், டில்லியில் ஆவணங்களை வெளியிட்டார். அது மட்டுமின்றி, பெங்களூரு வந்து போராட்டமும் நடத்தினார். கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில், பெரும் முறைகேடு நடந்துள்ளது. இதுவே காங்கிரசின் தோல்விக்கு காரணமானது. பா.ஜ.,வுக்கு தேர்தல் ஆணையம் ஒத்துழைப்பு அளித்தது என, குற்றம்சாட்டினார். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் இப்ராகிம், பாதாமி சட்டசபை தோகுதியில், சித்தராமையாவின் வெற்றிக்காக 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம். இதற்காக நானும், 'மாஜி' எம்.எல் .ஏ., சிம்மனகட்டியும் சேர்ந்து கடன் வாங்கினோம் என, புதிதாக குண்டு வீசினார். இதை பா.ஜ., அஸ்திரமாக பயன்படுத்துகிறது; விசாரணைக்கும் வலியுறுத்துகிறது. இது குறித்து, மத்திய தேர்தல் ஆணையத்துக்கு, ராஜ்யசபா பா.ஜ., - எம்.பி., லேஹர் சிங் கடிதம் எழுதியுள்ளார். 'பாதாமி தொகுதியில் 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கி, சித்தராமையாவை வெற்றி பெற வைத்ததாக, இப்ராகிம் பகிரங்கமாகவே கூறியுள்ளார். இது குறித்து, தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். இவ்விஷயத்தை அலட்சியம் செய்யக்கூடாது' என, வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை