உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த ஹரிபிரசாத்; பா.ஜ., - எம்.பி., லேஹர் சிங் கண்டனம்
''நம் ராணுவத்தை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி., ராகுலை, உச்ச நீதிமன்றம் தட்டிக் கேட்டதை, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் விமர்சித்திருப்பது சரியல்ல,'' என, பா.ஜ., - ராஜ்யசபா எம்.பி., லேஹர் சிங் தெரிவித்தார். இந்திய நிலபரப்பில் இருந்து 2,000 சதுர கி.மீ., பரப்பளவை, சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் கூறிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், 'உண்மையான இந்தியராக இருந்திருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்' என கண்டித்திருந்தது. குற்றச்சாட்டு இதற்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத், 'உச்ச நீதிமன்றம், சில உயர் நீதிமன்றங்கள் வழங்கிய சமீபத்திய அரசியல் நோக்கம் கொண்ட உத்தரவுகள், தீர்ப்புகளை ஜனாதிபதி கவனிக்க வேண்டும். அரசியலமைப்பு, நீதித்துறை அமைப்பின் மீதான நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்' என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., லேஹர் சிங் தன் 'எக்ஸ்' பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: நம் ராணுவம் பற்றி அவதுாறான கருத்துகளை தெரிவித்த ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு, ஹரிபிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, துரதிர்ஷ்டவசமானது. அவர் முதிர்ந்த அரசியல்வாதி என்று நினைத்தேன். இது போன்ற பேச்சை, அவரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் மீதான அவரது விசுவாசம் புரிந்து கொள்ளத்தக்கது. ஆனால், தேசத்தின் மீது, அவர் காட்டும் விசுவாசம், நிலை நிறுத்தப்பட வேண்டும். ராகுலின் பொறுப்பற்ற அறிக்கைகள், அனைவருக்கும் தெரியும். அவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஒரு காலத்தில், காங்கிரஸ் தலைவர் 'இந்தியா தான் இந்திரா, இந்திரா தான் இந்தியா' என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அக்கட்சியை சேர்ந்தவர்களும், அதே மனநிலையை கொண்டு இருந்தனர். முதிர்ச்சி ராகுல் மதிக்கப்பட வேண்டுமென்றால், அவரது பேச்சில் முதிர்ச்சி, கண்ணியம், நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். ராகுலின் அறிக்கை, நீதிமன்ற அவமதிப்பா என்பதை முடிவு செய்வது, என் வேலையல்ல. ஒரு அரசியல்வாதியான ராகுல், தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை விமர்சிக்க முயற்சிக்கிறது. அவர்கள், தங்கள் கட்சியை பாதுகாக்க பொய்யை பரப்புகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். - நமது நிருபர் -