சித்ரதுர்காவில் பா.ஜ., போராட்டம்: கரப்பான் பூச்சி கட் - அவுட ் எரிப்பு
சித்ரதுர்கா: ' ஜனநாயகத்தை பாதுகாப்போம்; அராஜகத்தை ஒழிப்போம்' என்ற பெயரில், சித்ரதுர்காவில் பா.ஜ., நடத்திய போராட்டத்தில், கரப்பான் பூச்சி 'கட் - அவுட்' எரிக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர்., பணியில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக, காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 'ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அராஜகத்தை ஒழிப்போம்' என்ற பெயரில், நாடு முழுதும், பா.ஜ.,வும் பதில் போராட்டம் நடத்துகிறது. சித்ரதுர்காவில் நேற்று நடந்த போராட்டம், பேரணியில் கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் திவேதி, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணியாக சென்று காங்கிரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக போராடும் கரப்பான் பூச்சி கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கரப்பான் பூச்சி கட் - அவுட் எரிக்கப்பட்டது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், ஹரிஷ் திவேதி பேசியதாவது: தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அரசியலமைப்பு நிறுவனங்களை காங்கிரஸ் மதிப்பது இல்லை. அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்து, ராகுல் நாடகம் ஆடுகிறார். அவர் யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எப்போதும் எதிராக உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்தனர். கர்நா டகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், மக்கள் விரோத அரசு. வரும், 2028 சட்டசபை தேர்தலில் இங்கு காங்கிரஸ் படுதோல்வி அடையும். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அதிக தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.