ரூ.800 கோடி அரசு நிலம் அபகரிப்பு 22 பேர் மீது பா.ஜ., ரமேஷ் புகார்
பெங்களூரு: மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகருக்கு நெருக்கமானவர்கள் உட்பட, 22 பேர் அரசுக்கு சொந்தமான, 800 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், லோக் ஆயுக்தாவில் நேற்று புகார் அளித்தார். பின், அவர் அளித்த பேட்டி: பெங்களூரு தெற்கின், தாவரகெரே பேரூராட்சியில், சர்வே எண்: 233, 234, 235 மற்றும் 236ல் 165 கோடி ரூபாய் மதிப்புள்ள 26 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இதில், 54 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஏக்கர் நிலத்தை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, தன் மனைவி ராதாவின் பெயரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து, விசாரணைக்கு அனுமதி அளிக்கும்படி, கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். போலி ஆவணங்களை உருவாக்கி, மூன்றாம் நபருக்கு நிலம் கிடைக்க செய்து, அதன்பின் தன் மனைவி பெயருக்கு மாற்றியுள்ளார். நடப்பாண்டு ஏப்ரல் 3ம் தேதியன்று, துணை பதிவு அதிகாரி அலுவலகத்தில் பதிவு நடந்துள்ளது. யஷ்வந்த்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பெங்களூரு தெற்கின், தாவரகெரே பேரூராட்சியில் குருபரஹள்ளி கிராமத்தின் சர்வே எண்: 158ல், 130.29 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் முழுதும் அரசுக்கு சொந்தமானது. தற்போது குருபரஹள்ளி கிராமத்தில் ஒவ்வொரு ஏக்கர் நிலத்தின் மார்க்கெட் விலை, குறைந்தபட்சம் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இதன்படி, 130.29 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 800 கோடி ரூபாய். இவ்வளவு விலை மதிப்புள்ள அரசு நிலத்தை, தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி போலி ஆவணங்கள் உருவாக்கி அபகரித்துள்ளனர். இந்த மோசடியில், எம்.எல்.ஏ., சோமசேகருக்கு நெருக்கமான ரங்கம்மா, வெங்கடம்மா, சந்தர் ராவ், மனோகர் பாபடே, சிவண்ணா, அப்துல் சத்தர் உட்பட, பலருக்கு தொடர்புள்ளது. இவர்கள் அரசு நிலத்தை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர். எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, பெங்களூரு நகர உதவி கலெக்டர் அபூர்வா பிடரி, பெங்களூரு தெற்கு சிறப்பு தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு தெற்கு வருவாய் ஆய்வாளர் மோனிஷ், கிராம கணக்காளர் நஞ்சேகவுடா உட்பட 22 பேர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளேன். அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.