பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் கைகலப்பு
பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநரும், பெண் பயணியும் அடிதடியில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. பெங்களூரின், துமகூரு சாலையில், பீன்யா அருகில் நேற்று முன்தினம் மதி யம், பி.எம்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பெண் பயணி, தான் இறங்க வேண்டிய இடத்தில், பஸ்சை நிறுத்தும்படி கூறினார். ஆனால் ஓட்டுநர் அந்த இடத்தில் நிறுத்தம் இல்லாததால், நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. கோபமடைந்த பெண் பயணி, பஸ் ஓட்டுநரை திட்டினார். இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்வதற்குள், நடத்துநருக்கு பெரும் தலைவலியானது. இந்த சம்பவத்தை பஸ்சில் இருந்த பயணியர், தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது வேகமாக பரவி வருகிறது.