கால்வாயில் மூழ்கி உயிரிழந்த 2 நண்பர்கள் உடல் மீட்பு
ராய்ச்சூர் : ராய்ச்சூரில் காந்தாரா திரைப்படம் பார்க்க சென்று டிக்கெட் கிடைக்காததால், கால்வாயில் குளிக்க சென்ற இருவர், நீரில் மூழ்கி பலியாயினர். இவர்கள் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர், முத்கல்லை சேர்ந்த நண்பர்கள் நான்கு பேர், நேற்று முன்தினம் மாஸ்கி நகரில் 'காந்தாரா - 1' திரைப்படம் பார்க்க சென்றனர். மதிய காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் நகரில் துங்கபத்ரா கால்வாயில் குளித்து விட்டு, மாலை நேர காட்சியை பார்த்துவிட்டு ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்தனர். அதன்படி நண்பர்கள் நான்கு பேரும், கால்வாயில் இறங்கினர். கால்வாயில் ஓடும் நீரில் இறங்கிய மட்கல் நகரை சேர்ந்த யல்லலிங்கா, 38, நீச்சலடிக்க முடியாததால் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற வெங்கடேச மோச்சி, 30, முயற்சித்தார். இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து மாஸ்கி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், இருவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் கிடைக்காததால், கைவிட்டனர். நேற்று காலை மீண்டும் தேடியதில், இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.