உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பி.பி.எல்., ரேஷன் அட்டை குறை தீர்வு நிகழ்ச்சி

 பி.பி.எல்., ரேஷன் அட்டை குறை தீர்வு நிகழ்ச்சி

தங்கவயல்: தங்கவயலில் பி.பி.எல்., ரேஷன் அட்டைகளை, ஏ.பி.எல்., அட்டைகளாக மாற்றியுள்ள பிரச்னை குறித்து, குறை தீர்க்கும் நிகழ்ச்சி, நேற்று தங்கவயல் நகராட்சி அரங்கில் நடந்தது. அண்மையில் திருத்தப்பட்ட, தகுதி அடிப்படையில் பி.பி.எல்., எனும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டைகள், ஏ.பி.எல்., எனும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. தங்கவயல் தாலுகாவில் மட்டும், 2,000 பி.பி.எல்., ரேஷன் அட்டைகளை, ஏ.பி.எல்., அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளதால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பல குடும்பங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட பலர், தங்களது குறைகளை, தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம் புகார் செய்திருந்தனர். இதற்கு தீர்வு காண அவர், உணவு, வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மாநில ஆணையரிடம் தெரிவித்திருந்தார். அவரின் வலியுறுத்தலை ஏற்று, இணை இயக்குநரை பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நியமித்தார். அதன்படி, நேற்று, ரூபகலா எம்.எல்.ஏ., தலைமையில், பி.பி.எல்., ரேஷன் அட்டை தொடர்பான பிரச்னைகள் குறித்து தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்களை வழங்கும் குறை தீர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உணவு, வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறையின் இணை இயக்குநர் ராஜசேகர், துணை இயக்குநர் மல்லிகார்ஜுன், மற்றும் தாலுகா அளவிலான அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., ரூபகலா மற்றும் பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !