அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.5,000 டிபாசிட் சேர்க்கையை அதிகரிக்க தொழிலதிபர் தாராளம்
தட்சிண கன்னடா: அரசு ப ள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், மங்களூரில் உள்ள அரசு முதன்மை துவக்க பள்ளியில் சேர்ந்த, 17 மாணவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கியில் தலா 5,000 ரூபாய் 'டிபாசிட்' செய்துள்ளார் தொழிலதிபர் ஒருவர். இத்திட்டத்தை மாநிலம் முழுதும் அமல்படுத் த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரின் அசோக் நகரில், 100 ஆண்டுகள் பழமையான அரசு முதன்மை துவக்க பள்ளி உள்ளது. சில ஆண்டுகளாக இப்பள்ளியில், மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது இங்கு, 100 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அரசிடம் இருந்து போதிய நிதியுதவி கிடைக்காததால், உள்ளூர் நன்கொடையாளர்கள், பல்வேறு அமைப்பினரால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோன்று நிரந்தர ஆசிரியர்களும் இல்லாததால், அப்பகுதி மக்களின் உதவியால், சில கவுரவ ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த தொழிலதிபர் தினகர் ராவ், பள்ளியை காப்பாற்றவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் தன் சொந்த செலவில், ஒன்றாம் வகுப்பில், 10 மாணவர்களுக்கும், இரண்டாம், மூன்றாம் வகுப்பில் ஏழு மாணவர்களுக்கும் தலா, 5,000 ரூபாயை, அம்மாணவர்களின் பெயரில் வங்கியில் டிபாசிட் செய்து உள்ளார். இந்த மா ணவர்கள், இதே பள்ளியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் படித்தால், ஒவ்வொரு மாணவருக்கும் வட்டியுடன், 6,690 ரூபாய் கிடைக்கும். இது தவிர, இப்பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாக யக் ஷகானா, கராத்தே, ஓவியம், யோகா, தியானம் போன்றவை கற்றுத்தரவும் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து பள்ளியின் தாளார் ஜாய் சம்விதா கூறுகையில், ''நடப்பாண்டு தான் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, 17 மாணவர்களின் வங்கி கணக்கில், தலா 5,000 ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இத்தகவல் அறிந்த ஏழை பெற்றோர், தங்கள் பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் கடந்தாண்டை விட, இந்தாண்டு மாணவர் சேர்க்கை சிறிது அதிகரித்து உள்ளது,'' என்றார். இதையறிந்த மாவட்டத்தின் கன்னட ஆர்வலர்கள், கன்னட அமைப்பினர், அரசு பள்ளியை காப்பாற்ற, இத்திட்டத்தை மாநிலம் முழுதும் செயல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.