உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பள்ளிக்கு வராத மாணவரை கண்டித்த ஆசிரியையை தாக்கிய தந்தை மீது வழக்கு

பள்ளிக்கு வராத மாணவரை கண்டித்த ஆசிரியையை தாக்கிய தந்தை மீது வழக்கு

மாலுார்:பள்ளிக்கு வராத மாணவரை கண்டித்த ஆசிரியை தாக்கப்பட்டார். பள்ளி மாணவரின் தந்தை மீது வழக்குப் பதிவாகி உள்ளது. பங்கார்பேட்டை பாலவதியம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா, 45. மாலுார் தாலுகாவில் செக் ஷதரஹள்ளி கிராமத்தில் உள்ள கன்னட அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 12ம் தேதி பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க சென்றிருந்தார். வகுப்பில், ஒரு மாணவரிடம், இரண்டு நாட்களாக பள்ளிக்கு வராததற்கான காரணத்தையும், கன்னடத் தேர்வு ஏன் எழுதவில்லை என்றும் மஞ்சுளா கேட்டுள்ளார். இதற்கு மாணவர், 'நான் படிக்கவில்லை. அதனால் தேர்வு எழுத வரவில்லை' என்று கூறியுள்ளார். உடனே, ஆசிரியை, தன் கையால் மாணவரை அடித்துள்ளார். கோபமடைந்த மாணவர், தன் தாயை அழைத்து வருவதாக கூறி விட்டு, பள்ளியில் இருந்து வெளியேறினார். வீடியோ சில நிமிடங்களில் அந்த மாணவர், தன் தந்தை சவுடப்பாவை அழைத்து வந்தார். பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியையை பார்த்த அவர், மோசமான வார்த்தைகளால் திட்டினார். வகுப்பறையை விட்டு வெளியே வருமாறு சைகை காண்பித்துள்ளார். வெளியே சென்ற ஆசிரியையை இழுத்துச் சென்று, கீழே தள்ளியுள்ளார். இதில், இரும்பு கதவு மீது ஆசிரியை மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதை பொருட்படுத்தாத சவுடப்பா, ஆசிரியையின் தலையின் பின்புறத்தில் தாக்கி உள்ளார். பின் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை, ஒரு பள்ளி ஊழியர், மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். காயமடைந்த ஆசிரியையை, மாலுார் அரசு மருத்துவமனையில் பள்ளி ஊழியர்கள் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாஸ்தி போலீஸ் நிலைய போலீசார், மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் ஆசிரியை நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்தார். மாணவர் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிகாரி கண்டனம் மாலுார் வட்டார கல்வி அதிகாரி கெம்பையா கூறுகையில், ''மாணவரிடம் கேள்வி கேட்டதற்காக ஆசிரியையை, அவரது தந்தை தாக்கியது கண்டிக்கத்தக்கது. ஏதாவது பிரச்னை இருந்தால், துறை அதிகாரிகளிடம் புகார் செய்திருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது. சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார். ஆசிரியை தாக்கப்பட்டது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோலார் மாவட்ட கலெக்டரிடம் தங்கவயல் வட்டார ஆசிரியர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை