உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ராமேஸ்வரம் கபே உணவில் புழு உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு

 ராமேஸ்வரம் கபே உணவில் புழு உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூரின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின், 'ராமேஸ்வரம் கபே' உணவில் புழு கிடந்தது தொடர்பாக, கபே உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல சைவ உணவகமான, 'ராமேஸ்வரம் கபே'வுக்கு பெங்களூரின் பல்வேறு இடங்களிலும் கிளைகள் உள்ளன. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலும் ராமேஸ்வரம் கபே உள்ளது. கடந்த ஜூலை 24ம் தேதி, நிகில், 19, என்பவர், தன் நண்பர்களுடன் பெங்களூரில் இருந்து அசாம் மாநிலம், குவகாத்திக்கு பயணிப்பதற்காக வந்திருந்தார். அவர் விமான நிலையத்தில் உள்ள ராமேஸ்வரம் கபேயில் பொங்கலும், காபியும் ஆர்டர் செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பொங்கலில் புழு இருப்பதை கவனித்தார். உடனடியாக ஊழியர்களிடம் கூறினார். அவர்களும் உணவை மாற்றி தர முன் வந்தனர். நிகில் மறுத்துவிட்டு, எந்த தகராறும் செய்யாமல் விமானத்தில் சென்றுவிட்டார். இந்த சம்பவத்தை கபேவில் இருந்த சில வாடிக்கையாளர்கள், தங்களின் மொபைல் போனில் வீடியோ, போட்டோ பதிவு செய்தனர். இதில் யாரோ ஒருவர், கபே உரிமையாளரை தொடர்பு கொண்டு, வீடியோவை காட்டி மிரட்டி, 25 லட்சம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. உணவில் புழு இருக்கும் வீடியோவும் பரவியது. 'புழு இருந்ததாக கூறிய, நிகில் தான் மிரட்டுகிறார்' என நினைத்து, சம்பவம் நடந்த மறுநாள், அவர் மீது ராமேஸ்வரம் கபே நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்திருந்தனர். தங்கள் கபேவில் அளிக்கப்பட்ட உணவில், புழு ஏதும் இருக்கவில்லை. பணம் பறிக்கவும், கபேவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கிலும், நிகில் நாடகமாடுவதாக புகாரில் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து நிகிலிடம் போலீசார் விசாரித்த போது, 'நடந்த விஷயம் ஊடகம் மூலமாகவே எனக்கு தெரிந்தது. கபே உரிமையாளர் தனக்கு மிரட்டல் போன் வந்ததாக கூறப்படும் நேரத்தில், நான் விமானத்தில் பயணித்து கொண்டிருந்தேன். புகாரில் கூறப்பட்ட போன் நம்பர்களுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை' என, விளக்கம் அளித்தார். 'நிகில் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை' என, கபே உரிமையாளரிடம் போலீசார் கூறினர். இதற்கிடையே உணவில் புழு இருந்ததுடன், தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, தர்மசங்கடத்தை ஏற்படுத்திய ராமேஸ்வரம் கபே மீது, வையாலிகாவல் போலீஸ் நிலையத்தில் நிகில் புகார் அளித்துள்ளார். இதன்படி, கபே உரிமையாளர்களான ராகவேந்திர ராவ், அவரது மனைவி திவ்யா ராவ் மற்றும் மேலாளர் சுமந்த் லட்சுமி நாராயணன் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ