ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சரவையில் இன்று தாக்கல்?
பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சரவையில், இன்று தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2015ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்காக 167 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த 2017ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் 2018 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசு வாங்கவில்லை.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வாங்கவில்லை. இந்நிலையில் அந்த அறிக்கையில் சில திருத்தங்கள் செய்து, கடந்த 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், அந்த அறிக்கையை அமல்படுத்த லிங்காயத், ஒக்கலிக சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபா தேர்தலை மனதில் வைத்து அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டனர்.சமீபத்தில் டில்லி சென்ற சித்தராமையாவிடம், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ராகுல் கூறி இருக்கிறார். ஜெகஜீவன்ராம் ஜெயந்தியின் போது உள்இடஒதுக்கீடு உட்பட எந்த அறிக்கைக்கும், யாரிடம் இருந்தும் எதிர்ப்பு வரவில்லை என்று முதல்வர் கூறி இருந்தார்.இந்நிலையில் இன்று நடைபெற உள்ள, அமைச்சரவை கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.