உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அமைச்சரவையை மாற்றியமைக்க முதல்வர் சித்தராமையா அதிரடி முடிவு!: ஆதரவாளர்களுக்கு பதவி தந்து பலத்தை அதிகரிக்க திட்டம்  பதவி பறிபோகும் அச்சத்தில் துணை முதல்வர் ஆதரவாளர்கள் 

அமைச்சரவையை மாற்றியமைக்க முதல்வர் சித்தராமையா அதிரடி முடிவு!: ஆதரவாளர்களுக்கு பதவி தந்து பலத்தை அதிகரிக்க திட்டம்  பதவி பறிபோகும் அச்சத்தில் துணை முதல்வர் ஆதரவாளர்கள் 

பெங்களூரு: அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் சித்தராமையா அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதன் வாயிலாக, ஆதரவாளர்களை பதவியில் அமர்த்தி, தன் பலத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளார். இதனால், தங்களின் பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில், துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர்கள் உள்ளனர். முதல்வர் பதவியை தக்கவைக்க சித்தராமையாவும், அந்தப் பதவியை பெற துணை முதல்வர் சிவகுமாரும் தீவிரமாக உள்ளனர். இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போர், இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. சந்திக்கவில்லை முதல்வர் பதவியில் அமர ஆர்வமாக உள்ள சிவகுமார், பல முறை டில்லிக்கும் சென்று, மேலிட தலைவர்களை சந்தித்துப் பேசினார். தனக்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளார். சில நாட்களுக்கு முன், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்திக்க, டில்லிக்கு சென்ற சிவகுமார், அவரை சந்திக்க முடியாமல் பெங்களூரு திரும்பினார். முதல்வர் பதவி குழப்பம், கர்நாடக காங்கிரசில் கோஷ்டி பூசலுக்கும் காரணமாகியுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு, குழப்பத்தை மேலும் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், முதல்வர் பதவி விஷயத்தில், கட்சி மேலிடம் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் திணறுகிறது. சித்தராமையா, சிவகுமார் இருவருமே கட்சிக்கு முக்கியமான தலைவர்கள். சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால், அஹிந்தா சமுதாயத்தினர் அதிருப்தி அடைவர். அவர்களின் ஓட்டுகள் கை நழுவும் என, காங்.,மேலிடம் அஞ்சுகிறது. முதல்வர் மாற்றம் விஷயத்தில் தலையிடவும் தயங்குகிறது. ஆனால் சிவகுமார், முதல்வராக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இதற்காக எம்.எல்.ஏ.,க்களை தனக்கு ஆதரவாக திருப்ப முயற்சிக்கிறார். பெலகாவியில் சட்டசபை கூட்டம் நடந்த போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு விருந்தும் கொடுத்தார். இதற்கிடையில், முதல்வர் சித்தராமையாவும், தன் பலத்தை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறார். அப்படி மாற்றி அமைக்கும் போது, தனக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, வெவ்வேறு காரணங்களால் தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாகேந்திராவும், ராஜண்ணாவும், முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், அவர்கள் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது . டில்லி சென்றுள்ள முதல்வர் சித்தராமையா, அங்கு நேற்று நடந்த காங்., தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அதற்கு முன்னதாக மேலிடத்தின் சில தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். விருந்து அவர்களுடன் அமைச்சரவையை மாற்றி அமைப்பது தொடர்பாக விவாதித்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் வாயிலாக, சிவகுமாருக்கு எதிராக மறைமுகமாக காய் நகர்த்துகிறார். அமைச்சரவையை மாற்றி அமைத்து, தனக்கு ஆதரவாக உள்ளவர்களை பதவியில் அமர்த்தினால் அடுத்த இரண்டு ஆண்டுகள் தன் பதவிக்கு ஆபத்து வராது என்பது, முதல்வரின் எண்ணமாகும். அமைச்சரவையை மாற்றியமைக்க மேலிடம் ஏற்கனவே கிரீன் சிக்னல் காட்டியுள்ளது. ஆனால், யார் யாரை அமைச்சரவையில் இருந்து நீக்குவது, யாரை சேர்ப்பது என்பதற்கு மேலிடம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. சித்தராமையா தயாரித்துள்ள பட்டியலுக்கு மேலிடம் அனுமதி அளித்தால், பொங்கல் நேரத்தில், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையை மாற்றியமைக்க, முதல்வர் சித்தராமையா விரும்புவதால், துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவு அமைச்சர்கள், தங்களின் பதவி பறி போகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். பலம் குறையும் என எதிர்பார்ப்பு முதல்வர் சித்தராமையா, அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்திருப்பதுடன், கர்நாடக காங்கிரஸ் தலைவரை மாற்றும்படியும் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கிறார். தனக்கு ஆதரவாக உள்ள அமைச்சர்களில் ஒருவரை, மாநில தலைவராக்கவும் முயற்சிக்கிறார். முன்னாள் அமைச்சர் ராஜண்ணா, மாநில தலைவர் பதவி மீது கண் வைத்துள்ளார். அதாவது, சிவகுமாரிடம் உள்ள மாநில தலைவர் பதவி பறிபோனால், அவரது பலம் குறையும். தன் கை ஓங்கும் என்பது முதல்வரின் எண்ணமாகும். ,....புல் அவுட்.... விளக்கின் வெளிச்சம் மட்டும், அனைவருக்கும் தெரியும். விளக்கின் கஷ்டம் யாருக்கும் தெரிவதில்லை. வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்புக்கு யாரும் விலை கூற முடியாது. - டி.கே.சிவகுமார், துணை முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி