சினி கடலை
2ம் பாதியில் திருப்பங்கள்!கன்னடத்திலும் குடும்பங்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின்றன. தற்போது திரைக்கு வர தயாராகும் 'டகீலா' திரைப்படத்திலும், அழகான குடும்ப கதை உள்ளது. இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'அழகான இளம் தம்பதி, மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகின்றனர். இவர்களுக்கு இடையே மூன்றாம் நபர் குறிக்கிடுகிறார். அதன்பின் தம்பதியின் வாழ்க்கை தலை கீழாகிறது. இவர்களுக்குள் விரிசலை ஏற்படுத்துகிறார்.'அந்நபரின் மோச வலையில் இருந்து தப்பித்து, தம்பதி மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடர்கிறார்களா என்பதை திரையில் பாருங்கள். படத்தின் இரண்டாம் பாதியில், பல திருப்பங்கள், சுவாரஸ்யங்கள் உள்ளன. இதில் தர்ம கீர்த்திராஜ், நிகிதா சாமி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்' என்றனர்.புற்றுநோய் என்பது புரளி!கன்னட திரையுலகின் பிரபல பாடகி அர்ச்சனா உடுபான, வருத்தத்தில் இருக்கிறார். இவருக்கு புற்றுநோய் வந்துள்ளது. பாடுவதை நிறுத்திவிட்டார் என, சோஷியல் மீடியாக்களில் வதந்தி பரவியுள்ளதே, அவரது வருத்தத்துக்கு காரணம்.இது தொடர்பாக, அவர் கூறுகையில், ''எனக்கு எந்த உடல் நிலை பிரச்னையும் இல்லை. சமீபத்தில் நான் அளித்திருந்த பேட்டியில், 20 ஆண்டுகளுக்கு முன் எனக்கு தொண்டையில் சிறு பிரச்னை இருந்தது. பாட முடியாமல் அவதிப்பட்டேன் என, கூறியிருந்தேன். என் முழு பேட்டியையும் பார்க்காத சிலர், எனக்கு புற்றுநோய் உள்ளதாகவும், பாடுவதை நிறுத்தியதாகவும் வதந்தி பரப்பியுள்ளனர்.''இது என் குடும்பத்தினருக்கு மன வலியை அளித்துள்ளது. நான் புதிய தொடரில் நடிக்கவுள்ளேன். அந்த கதாபாத்திரத்துக்கு தலைமுடி குட்டையாக இருக்க வேண்டும் என்பதால், குட்டையாக வெட்டிக்கொண்டேன். இதை வைத்து எனக்கு நோய் என, புரளி கிளப்புவது சரியல்ல. நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்,'' என்றார்.பெங்களூரில் 35 நாள் ஷூட்டிங்!சந்துரு ஓபய்யா இயக்கும், 'கரிமணி மாலிகா நீனல்லா' திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது. கதை குறித்து, இயக்குநர் கூறுகையில், 'இளநீர் விற்கும் இளைஞர், பூ விற்கும் இளம்பெண் இடையே ஏற்படும் காதல் கதை இதுவாகும். இவர்களுக்கிடையே மற்றொருவர் நுழைகிறார். இறுதியில் அவர் யாரை கரம் பிடிக்கிறார் என்பதே, கதையின் திருப்பம். பெங்களூரில் நடந்த உண்மை சம்பவத்தை, மையமாக வைத்து திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.'பெங்களூரிலேயே 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். டைட்டில் பாடலை பாவகடாவின், நிடகல் மலையில் படமாக்கினோம். இயக்கத்துடன், இசை அமைப்பது, தயாரிப்பு பொறுப்பையும் நானே ஏற்றுள்ளேன். மாருதி, ரமிகா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வரும்' என்றார்.போலீஸ் அதிகாரி வேடம்!நடிகர் சரணுடன், 'சூ மந்தர்' திரைப்படத்தில் நடித்த மேக்னா, தற்போது மற்றொரு படத்திற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, அவரிடம் கேட்ட போது, ''இயக்குநர் குருராஜின் முந்தைய படத்தில் நடித்திருந்தேன். எனவே தன் புதிய படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இதில் நான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். கதையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்.''தற்போதைக்கு படத்தை பற்றி அதிகமாக கூற முடியாது. ஜூன் இறுதியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. எனக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை. வெயிட்டான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். பத்து பட வாய்ப்புகள் வந்தால், எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை மட்டும் ஒப்புக்கொள்கிறேன். இதுவரை நான் நடித்த படங்கள் மக்களை சென்றடைந்த திருப்தி எனக்குள்ளது,'' என்றார்.இருக்கை நுனியில் ரசிகர்கள்!தெலுங்கு திரைப்படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை பிரியங்கா ரெவ்ரி, தற்போது முதன் முறையாக கன்னடத்தில் அறிமுகமாகிறார். இது தொடர்பாக, அவரிடம் கேட்ட போது, ''கன்னடத்தில் 'யாரிகே பேகு ஈ லோகா' என்ற படத்தில் நடிக்கிறேன். கன்னட மொழி உச்சரிப்பு, மிகவும் அழகாக உள்ளது. இங்குள்ள மொழி, கலாசாரம் என, அனைத்தும் புதிதாக இருந்தது.'புதிய காற்றை சுவாசிப்பதை போன்று உணர்ந்தேன். என்னால்முடிந்த வரை சிறப்பாக பணியாற்றினேன்.இதில் நாயகனின் காதலியாக நடிக்கி றேன். அடுத்து என்ன நடக்கும் என, ரசிகர்களை இருக்கைநுனிக்கு அழைத்து வரும் கதை. ஆடிஷன் மூலம் என்னை தேர்வு செய்தனர், என்றார்.