சினிகடலை
நடிகை பெயரில் மோசடி நடிகை ருக்மிணி வசந்த் பெயரில், பலருக்கும் மர்ம நபர்கள் போன் செய்து, 'மெசேஜ்' அனுப்பி பணம் பறிப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்த ருக்மிணி வசந்த், 'எக்ஸ்' வலைதளத்தில், 'என் பெயரை பயன்படுத்தி, என்னுடைய எண்ணில் இருந்து அழைப்போ அல்லது மெசேஜ் வந்தால், அவற்றை பொருட்படுத்தாதீர்கள். சைபர் குற்றவாளிகள் என் எண்ணை தவறாக பயன்படுத்தி தவறான தகவல் தெரிவித்து மோசடி செய்கின்றனர். அதை நம்பாதீர்கள். என்ன விஷயமாக இருந்தாலும் என்னை தொடர்பு கொண்டு பேசுங்கள். இந்த எண்ணில் இருந்து நான், யாருக்கும் 'மெசேஜ்' அனுப்பவில்லை' என விவரித்துள்ளார். கல்லுாரி கதைக்களம் சேகர் ரெட்டி தயாரிப்பில், காந்தி கதை எழுதி, இயக்குவதுடன், நாயகனாகவும் நடித்துள்ள பிரேமம் மதுரம் திரைப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. இதில் ஐஸ்வர்யா தினேஷ், அனுஷா ஜெயின் நாயகியராக நடித்துள்ளனர். கல்லுாரி நாட்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், கேள்விப்பட்ட விஷயங்களை கொண்டு காந்தி திரைக்கதை எழுதியுள்ளார். இன்றைய இளம் தலைமுறையினருடன் தொடர்புள்ள கதையாகும். பெங்களூரு, மங்களூரு, பைந்தூர், உடுப்பி, மல்பே சுற்றுப்பகுதிகளில், படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். உல்லாச பயணம் நடிகை தன்யா ராம்குமார், சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருப்பவர். தன் போட்டோக்கள், வீடியோக்களை அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். தன் தாயுடன் சமீபத்தில் மாலத்தீவுக்கு உல்லாச பயணம் சென்று வந்தார். அங்கு கடற்கரையில் எடுத்த படங்களை, சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அனைத்து போட்டோக்களும் கிளாமராக உள்ளன. தன்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்ப்பு நடிகர் சுதீப் நடிக்கும் மார்க் திரைப்படத்தில் நாயகனை அறிமுகம் செய்யும் 'டீசர்' வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திலும் சமூக விரோதிகளை ஒடுக்கும் கதாபாத்திரத்தில் சுதீப் நடித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநர் விஜய் கார்த்திகேயன், 'மார்க்' படத்தையும் இயக்கியுள்ளார். டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகையன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் திரையிடப்படும். இது சுதீப் நடிக்கும் 47வது திரைப்படமாகும். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். பாடல்கள் அற்புதம் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் மகன் ஜைத்கான், பனாரஸ் திரைப்படம் மூலம், திரையுலகில் நுழைந்தவர். அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட்டாக ஓடியது. தற்போது கல்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இது 2026 ஜனவரி 23ல் திரைக்கு வரவுள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்தன. இவருக்கு ஜோடியாக மலைகா வசுபால் நடித்துள்ளார். பிரபல இசை அமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இசையில், அனைத்து பாடல்களும் அற்புதமாக வந்துள்ளதாம். ஓ.டி.டி.,யில் வெளியிட முடிவு நடிகர் யுவராஜ்குமார் நடிப்பில், சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த எக்கா திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதில் சஞ்சனா ஆனந்த், சம்பதா நாயகியராக நடித்திருந்தனர். கிராமத்தில் இருந்து பெங்களூருக்கு வரும் இளைஞன், தன் வாழ்வில் சந்திக்கும் சவால்கள், அதை சமாளிக்க நிழலுலக தாதாவாக மாறும் கதை இது. படத்தின் கதையை விட, பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்தது. இந்த திரைப்படத்தை ஓ.டி.டி.,யில் வெளியிட, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.