| ADDED : நவ 19, 2025 09:05 AM
சிக்கமகளூரு: கர்நாடகாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் காபி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக காபி தோட்ட உரிமையாளர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அச்சங்கத்தினர் கூறியதாவது: கர்நாடகாவில் சிக்கமகளூரு, ஹாசன், குடகு ஆகிய மாவட்டங்களில் காபி அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த மே முதல் அக்டோபர் வரை ஆறு மாதங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால், காபி அறுவடை செய்வதில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு உள்ளது. இது, தேசத்தின் காபி உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நம் நாட்டில் காபி உற்பத்தியில், கர்நாடகாவின் பங்கு இன்றியமையாதது. நம் நாட்டில், 2025 - 26ம் நிதியாண்டில் காபி உற்பத்தி 4.03 லட்சம் டன்களாக இருக்கும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நடப்பு நிதியாண்டில் 3.73 லட்சம் டன்கள் மட்டுமே காபி உற்பத்தி செய்ய முடியும். இதற்கு கர்நாடகாவில் காபி உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு முக்கிய காரணமாக இருக்கும். கர்நாடகாவில் உள்ள காபி விவசாயிகள் கடனில் உள்ளனர். இவர்களின் சொத்துக்களை வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் ஏலம் விடலாம். எனவே, மத்திய அரசு தலையிட்டு காபி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.