| ADDED : நவ 21, 2025 06:16 AM
சிக்கமகளூரு: சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்திருந்த மாணவரை, உள்ளே அனுமதிக்காத கல்லுாரி முதல்வர் மீது, பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.தாலுகாவின், பாளஹொன்னுாரு கிராமத்தில் அரசு பி.யு.சி., கல்லுாரி உள்ளது. இதில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படிக்கும் மாணவர் ஒருவர், முதன் முறையாக சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்துள்ளார். மாலை, கருப்பு துண்டு அணிந்து நேற்று காலை கல்லுாரிக்கு வந்தார். இதை பார்த்த கல்லுாரி முதல்வர், மாணவரை கல்லுாரிக்குள் அனுமதிக்கவில்லை. 'மாலை, கருப்பு துண்டை அகற்றிவிட்டு, உள்ளே வந்தால் வா, இல்லை என்றால் வெளியே செல்' என, கூறினார். மாணவர் மாலையை கழற்ற மறுத்தார். தகவலறிந்து மூத்த அய்யப்ப பக்தர்கள், கல்லுாரிக்கு வந்தனர். போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். கல்லுாரி நிர்வாகத்தினரை சமாதானம் செய்து, 'அய்யப்ப மாலையை கழற்ற கூடாது' என, அறிவுறுத்தினர். அதன்பின் மாணவரை கல்லுாரிக்கு அனுப்பினர். நிர்வாகத்தினரும் கருப்பு துண்டை இடுப்பில் கட்டிக்கொள்ளும்படி, மாணவரிடம் கூறினர். இந்த சம்பவத்தால் கல்லுாரியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவானது.