ரூ.32 லட்சம் நகைகள் திருடிய கல்லுாரி பேராசிரியை கைது
பசவனகுடி: திருமண மண்டபங்களில் புகுந்து, 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடிய வழக்கில், கல்லுாரி பேராசிரியை கைது செய்யப்பட்டார். பெங்களூரு பசவனகுடியில் உள்ள திருமண மண்டபத்தில், கடந்த மாதம், 25ம் தேதி, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகளின் உறவுகார பெண், மணமகள் அறையில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க செயினை கழற்றி வைத்திருந்தார். இந்த செயின் திருடப்பட்டது. செயினை இழந்த பெண் அளித்த புகாரில், பசவனகுடி போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், கே.ஆர்.புரம் உதயாநகரில் வசிக்கும் ரேவதி, 55 கைது செய்யப்பட்டார். ஷிவமொக்காவை சேர்ந்த இவர், பல ஆண்டுகளாக உதயாநகரில் வசிக்கிறார். பெல்லந்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில், கன்னட துறையில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திங்கள் முதல் வெள்ளி வரை, கல்லுாரிக்கு சென்று பாடம் நடத்தும் ரேவதி, வார இறுதி நாட்களில் திருடுவதை தொழிலாக வைத்திருந்தார். திருமண மண்டபங்களுக்கு செல்லும் அவர், மணமக்களின் உறவினரிடம், 'நான் உங்கள் சொந்தம் தான்' என்று பேசி பழகுவார். பின், மணமக்களின் குடும்பத்தினர் கண் அயர்ந்த நேரத்தில், மணமகன், மணமகள் அறைக்குள் புகுந்து, நகைகளை திருடி செல்வது இவருக்கு கைவந்த கலை. பெங்களூரு மட்டுமின்றி ஷிவமொக்கா, சிக்கமகளூரிலும் இவர் கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. கைதான ரேவதியிடம் இருந்து, 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.