உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / யானை தாக்குதல் பலிகளை கண்டித்து சிக்கமகளூரில் முழு கடையடைப்பு! 2 ஆண்டில் 14 பேர் உயிரிழந்ததால் மக்கள் ஆவேசம்

யானை தாக்குதல் பலிகளை கண்டித்து சிக்கமகளூரில் முழு கடையடைப்பு! 2 ஆண்டில் 14 பேர் உயிரிழந்ததால் மக்கள் ஆவேசம்

சிக்கமகளூரு: சிக்கமகளூரில் யானைகள் தாக்குதலால் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகளை கண்டித்து, மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நேற்று முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டன. ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் யானைகள் தாக்குதலில் மட்டும் 14 உயிர்கள் பறிபோனதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என கிராமத்தினர் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர். சிக்கமகளூரின் என்.ஆர்., புரா தாலுகா ஹென்னங்கி கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி, 45. இவர், தனது தோட்டத்தில் பணியை முடித்து கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் போது, யானை தாக்கியதில் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு வாரங்களுக்கு முன் தான் புதிய வீட்டில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறப்பு கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

போராட்டம்

இச்சம்பவத்தை கண்டித்து, என்.ஆர்., புரா, பாலேஹொன்னுார், ஹென்னங்கி பகுதிகளில் நேற்று முழு கடை அடைப்புக்கு வணிகர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு அனைத்து வணிகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கினர். சிக்கமகளூரின் முக்கிய பகுதியான என்.ஆர்., புராவில் கடைகள் எதுவும் திறக்காமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதுமட்டுமின்றி, என்.ஆர்., புராவின் முக்கிய சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ‘இப்பகுதியில் சுற்றித்திரியும் அனைத்து யானைகளையும் பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் யானைகள் தாக்கியதில் என்.ஆர்., புரா தாலுகாவில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு போலியான வாக்குறுதி கொடுக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு சென்றுவிட்டு உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தில் வாழ் கிறோம்.

இதுவே கடைசி

யானை தாக்குதலால் பறிபோன உயிர்களில் கிருஷ்ணமூர்த்தியே கடைசியாக இருக்கட்டும். மாநில அரசு மற்றும் வனத்துறை வழக்கம்போல வெற்று காரணங்கள் சொல்லாமல், நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தீவிர போராட்டங்களில் களமிறங்குவோம். பத்ரா சரணாலயத்தில் ஏற்கனவே 450க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அங்கிருக்கும் யானைகளுக்கு உணவு கிடைக்காததால், அவை கிராமத்திற்குள் நுழைகின்றன. இந்த சூழ்நிலையில், ஹாசனிலிருந்து 56 யானைகளை பத்ரா சரணாலயத்திற்கு மாற்ற மாநில அரசு முடிவெடுத்து உள்ளதாக அமைச்சர் சிவலிங்கே கவுடா கூறுகிறார். அவர் ஹாசன் பொறுப்பு அமைச்சராக செயல்படுகிறேன் என்ற பெயரில், மற்ற மாவட்டத்தை சேர்ந்த மக்கள் விஷயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார். பத்ரா சரணாலயத்தில் மேலும் பல யானைகளை கொண்டு வருவதால், எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இதை சிவலிங்கே கவுடா புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.20 லட்சம்

தற்பாது, காட்டு யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். ட்ரோன் கேமரா உதவியுடன் யானையை தேடும் பணி நடக்கிறது. காட்டு யானையை பிடிப்பதற்கு, ‘கும்கி’ யானைகளை அழைத்து வர உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாயை இழப்பீடாக சிருங்கேரி தொ குதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜே கவுடா நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ