உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மஹா.,வுடன் இணைய தீர்மானம் காங்., – எம்.எல்.ஏ., மிரட்டல்

மஹா.,வுடன் இணைய தீர்மானம் காங்., – எம்.எல்.ஏ., மிரட்டல்

விஜயபுரா: ‘‘இண்டி தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு நீர் தரவில்லை என்றால், இண்டி தொகுதியை மஹாராஷ்டிராவுடன் இணைக்கும் தீர்மானத்தை கொண்டு வருவோம்,’’ என, அமைச்சர் முன், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். விஜயபுரா மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வறட்சி நிலவரம் குறித்து அம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராயகவுடா பாட்டீல் பேசியதாவது: பீமா ஆறு வறண்டு விட்டதால், இண்டி டவுன், பல கிராமங்களுக்கு, கடந்த 37 நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை. அலமாட்டி அணையில் இருந்து இண்டி தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். குடிநீர் தேவையை நிறைவேற்ற பீமா, கிருஷ்ணா நதிகளுக்கு மஹாராஷ்டிராவில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க, அம்மாநில அரசை வலியுறுத்த, கர்நாடக அரசு இங்கிருந்து ஒரு குழுவை அனுப்ப வேண்டும். இண்டிக்கு தண்ணீர் தரவில்லை என்றால், இண்டி தொகுதியை மஹாராஷ்டிராவுடன் இணைக்கும் தீர்மானத்தை நாங்கள் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுகையில், ‘‘உங்கள் தொகுதிக்கு மட்டுமல்ல. என் தொகுதியான பபலேஸ்வரிலும் குடிநீர் பிரச்னை உள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அரசை வலியுறுத்துவோம்,’’ என்றார். அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தி, தன் தொகுதியை வறட்சி பாதித்த பகுதி என்று அறிவிக்கவில்லை என கூறி, யஷ்வந்த்ராயகவுடா பாட்டீல், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக இரு முறை கடிதம் அளித்து, பின், வாபஸ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி