குறைந்த விலை மருந்து கடைகள் கோர்ட் தலையிடாது என உத்தரவு
பெங்களூரு: 'ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்துள்ள மத்திய அரசின் மலிவு விலை மருந்தக விஷயத்தில் நீதிமன்றம் தலையிடாது' என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம், புத்துாரை சேர்ந்த பெண் தொழிலதிபர் சவிநயா தாக்கல் செய்த மனு:புத்துாரில் கும்பாரா கிராமத்தில் முதன்மை விவசாய துறை கட்டடத்தில், மலிவு விலை மருந்தகம் அமைக்க, விண்ணப்பித்திருந்தேன். இதற்கான முதல்கட்ட அனுமதியும் கிடைத்து விட்டது. இதற்கு தேவையான ஆவணங்கள், ஒப்புதல் கடிதம், 'ஸ்டோர் கோட்' வழங்கும்படி கேட்டிருந்தேன்.இதற்கிடையில், ஷீலா பட் என்ற மற்றொரு பெண் தொழிலதிபருக்கும், அதே கிராமத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளனர். அவருக்கு வழங்கிய 'ஸ்டோர் கோட்டை' ரத்து செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டிருந்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, ''ஒரே கிராமத்தில் குறைந்த துாரத்தில் இரண்டு மலிவு விலை மருந்தகம் திறக்க அனுமதி அளித்திருப்பதால், தொழிலில் நஷ்டம் ஏற்படும். ''எனவே, ஷீலா பட்டிற்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் சவிநயா வலியுறுத்தி இருப்பது ஏற்க முடியாது.''ஏழைகளுக்கு 50 முதல் 90 சதவீத தள்ளுபடியில் குறைந்த விலையில் மலிவு விலை மருந்தகத்தில் மருந்துகள் கிடைக்கின்றன. பொது மக்களுக்கு அனுகூலமான விஷயத்தில், மத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் விஷயத்தில் நீதிமன்றம் தலையிடாது. மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.