உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போதையில் மூவர் ரகளை கோர்ட் நுாதன தண்டனை

போதையில் மூவர் ரகளை கோர்ட் நுாதன தண்டனை

குடகு: குடிபோதையில் பொது இடத்தில் தகராறு செய்து, மக்களுக்கு தொல்லை கொடுத்த மூவருக்கு, மடிகேரி நீதிமன்றம் நுாதன தண்டனை விதித்தது.குடகு மாவட்டம், சோமவாரபேட் தாலுகாவில் வசிப்பவர்கள் தீபக், 30, கவுசிக், 28, கார்த்திக், 28. இவர்களுக்கு குடிப்பழக்கம் உள்ளது. சில நாட்களுக்கு முன், இம்மூவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்தனர். சாலையில் செல்லும் பொது மக்களிடம் தகராறு செய்தனர். அப்பகுதியினர் கண்டித்தும்பொருட்படுத்த வில்லை. இவர்களின் தொந்தரவு தாங்காமல், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த சோமவாரபேட் போலீசார், மூவரையும் கைது செய்து செய்தனர். சோமவார பேட்டின் சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற விசாரணையில் தங்களின் தவறை ஒப்புக்கொண்டனர்.தீபக், கவுஷிக், கார்த்திக் ஆகியோருக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்தும், சோமவார பேட் அரசு மருத்துவமனையில், ஒரு நாள் முழுதும் துப்புரவு பணியை செய்ய வேண்டும். அந்த தவறை மீண்டும் செய்ய கூடாது என்றும், நீதிபதி கோபால கிருஷ்ணா, நேற்று முன் தினம் உத்தரவிட்டார். இதன்படி சோமவார பேட் எஸ்.ஐ., கோபால் முன்னிலையில், அரசு மருத்துவமனையில் மூவரும் நேற்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை