பேத்தமங்களா தடுப்பணை மதகில் விரிசல் அதிகாரியின் பாராமுகத்தால் அபாயம்
பேத்தமங்களா : தங்கவயல் நகரம், பேத்தமங்களா ஆகிய பகுதிகளுக்கு குடிநீரை வழங்கிய பேத்தமங்களா தடுப்பணை நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்தாலும், தடுப்பணையின் ஒரு மதகில் ஏற்பட்ட விரிசல் கவலை அளித்துள்ளது. பேத்தமங்களா தடுப்பணையில் மொத்தம் 34 மதகுகள் உள்ளன. இந்த தடுப்பணையில் எட்டு மதகுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. ஆயினும் நடுவில் உள்ள ஒரு மதகின் அருகே சுவரில் ஒரு செடி வளர்ந்துள்ளதால் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நீர் கசிந்து கொண்டிருக்கிறது. இதை யாரும் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போதைய நிதி நிலை பற்றாக்குறையால், இதை பழுது பார்க்கவில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால் மதகு உடைந்து விழும் ஆபத்து உள்ளதாக பலரும் கவலைப்படுகின்றனர். சமீபத்தில் பேத்தமங்களா தடுப்பணையின் உதவி நிர்வாக பொறியாளர் சிவகுமார், லோக் ஆயுக்தா வலையில் விழுந்த பின், எந்த அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. இதற்கு பொறுப்பாக, பெங்களூரில் உள்ள ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் எப்போது வருவார்; எல்போது செல்வார் என்பது யாருக்கும் தெரியாது. சனிக்கிழமை தடுப்பணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. அர்ப்பணிப்பு பூஜை நடந்தபோது, அதிகாரி யாரும் வரவில்லை. பேத்தமங்களா தடுப்பணை மதகு விரிசல் கண்டுள்ளதை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பேத்தமங்களா தடுப்பணையின் கொள்ளளவு அரை டி.எம்.சி.,யை விட குறைவு. இங்கிருந்து தங்கவயலுக்கு 15 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆயினும் பல்வேறு காரணங்களால் 5 லட்சம் லிட்டர் கூட தங்கவயலுக்கு சப்ளை செய்வதில்லை.