ஹிந்து அமைப்பு பிரமுகர்களுக்கு மங்களூரில் கொலை மிரட்டல்
தட்சிண கன்னடா: பஜ்ரங்தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலைக்கு பின், மேலும் இரு ஹிந்து பிரமுகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது, மங்களூரில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில், இம்மாதம் 1ம் தேதி பஜ்ரங்தள் அமைப்பு தொண்டர் சுகாஸ் ஷெட்டி, கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முகமது பாசில் கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை செய்தது, விசாரணையில் உறுதியாகி உள்ளது.இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் வகுப்புவாத வன்முறை தடுப்பு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.இந்நிலையில், மற்றொரு பஜ்ரங்தள் பிரமுகர் பரத் கும்டேல். 2017 ஜூன் 21ம் தேதி, பன்ட்வாலில், எஸ்.டி.பி.ஐ., முக்கிய தலைவராக இருந்த அஷ்ரப் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், பரத் கும்டேலுக்கும் தொடர்பு உள்ளது.நேற்று காலை அவரது சமூக வலைதளத்தில் வந்த குறிப்பில், 'வெயிட் கும்டேல். குறித்து கொள் - 5.5.205 இரவு 9:30 மணி, உன் இடத்தில்' என்று மிரட்டல் தகவல் வந்துள்ளது. இதுபோன்று, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சரண் பம்ப்வெல்லுக்கும் இதுபோன்று சமூக வலைதளத்தில் மிரட்டல் தகவல் வந்துள்ளது. அதுவும், 'நீ எங்கு இருக்கிறாய். அடுத்து நீ தான்' என்று மலையாளத்தில் குறிப்பிட்டுள்ளது.போலீசாரில் பாதுகாப்புக்கு இடையிலும், ஹிந்து பிரமுகர்களுக்கு மிரட்டல் தகவல் வந்திருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது. இந்த மிரட்டல்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.